கனவு மெய்ப்பட – 15
ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா எனத் தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு திரும்பினார்.
‘யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்குச் சிந்தனையில்லாமல், இன்னமும் இதர வர்த்தக விழாக்களில் நடைபெறுவது போல தெரிந்தவர், புகழ்பெற்றவர், இருக்கப்பெற்றவர் என்ற வித்தியாசம் பார்த்து உட்காரவைப்பதை பரத நாட்டியம் போன்றதொரு கலாச்சார விழாவில் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை, நின்று கொண்டு பார்க்க சுயகவுரவம் இடம் தராததால் திரும்பி வந்துவிட்டேன்’ என மன வருத்தத்துடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இதைப் படித்தபோது ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 2007ஆம் ஆண்டு என் அப்பா அம்மா பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை துவங்கி அதில் நான் தயாரித்திருந்த 1-1/2 மணிநேர **‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’** என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பச் சென்னை வாணிமஹாலில் ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட அது ஒரு சினிமாவேதான்.
இந்த நிகழ்ச்சியை சர்ப்ரைஸ் நிகழ்ச்சியாக அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்திருந்தேன். ஆவணப்படம் எடுத்ததோ, ‘ஸ்ரீபத்மகிருஷ்’ ஆரம்பிக்க இருப்பதோ எதுவுமே தெரியாது. சர்ப்ரைஸ்.
இதெல்லாம் இங்கு முக்கியமல்ல. அந்த ஹாலில் டீ காபிக்குக்கூட அனுமதி இல்லை. எனவே பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிகழ்ச்சி முடிந்ததும் ஓர் ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
நிகழ்ச்சி 3 மணிநேரம் ஆதலால் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமாவது டீ காபி கொடுக்க அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருந்தேன்.
இது என் பெற்றோருக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
‘இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வந்திருக்கும் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான். டீ காபி கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் யாருக்குமே கொடுக்கக் கூடாது’ என்று சொன்னதோடு ஹால் மேனேஜரிடம் பேசி ஹாலுக்கு வெளியே சிறப்பு விருந்தினர்கள் உட்பட அனைவரும் டீ சாப்பிட அனுமதி பெற்று, வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் ‘சிறப்பு விருந்தினர்கள்’ என்ற தகுதிக்கு உயர்த்தினார் என் அப்பா.
அன்றிலிருந்து நான் ஏற்பாடு செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒரு மரியாதை, பார்வையாளர்களுக்கு ஒரு மரியாதை என்றில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற அத்தனை பேருக்கும் ஒரே விதமான மரியாதை என்ற வழக்கத்தை உண்டாக்கினேன்.
பேச்சாளர்களாகக் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ஒருவிதக் கடமை உணர்ச்சியுடன்தான் வருகிறார்கள். உண்மையில் பார்வையாளர்கள்தான் ‘மெகா’ சிறப்பு விருந்தினர்கள். காரணம் அவர்கள் இல்லை என்றால் நிகழ்ச்சியை யாருக்காக நடத்தப் போகிறோம்? யாருடன் பேசப் போகிறோம்?
நானும் நிறைய மேடைகளில் பார்த்திருக்கிறேன். டீ, காபி, ஸ்னாக்ஸ் என மேடையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் அளிப்பார்கள். மைக்கில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும் டீ, காபி அவர் பேசி முடித்து வந்து அமர்வதற்குள் ஆறி ஆடை படிந்திருக்கும்.
மேலும் பார்வையாளர்களுக்கு முன்பு மேடையில் உட்கார்ந்திருப்பவர்கள் மட்டும் சாப்பிடுவதும் என்னைப் பொறுத்தவரை சங்கடமே.
நிகழ்ச்சி நடத்துபவர்கள் சில சமயம் சிறப்பு விருந்தினர்களுக்குச் சன்மானம் தந்தும் அழைக்கிறார்கள். பிரபலங்களின் நட்சத்திர அந்தஸ்தைப் பொறுத்து அதற்கேற்றாற்போல் பணம் உண்டு (இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்). பிரபலங்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி வருவதாலும், நிகழ்ச்சிக்கு அவர்களால் மதிப்பு கூடுவதாலும் இந்தப் பணம் அளிக்கப்படுகிறது. அதை நாம் குறை சொல்ல முடியாது.
ஆனால், பார்வையாளர்களுக்காகவும் கொஞ்சம் செலவு செய்யலாம் என்பது என் கருத்து. கூட்டத்துக்கான நமது செலவுகளைச் சிறிது கவனத்துடன் திட்டமிட்டால் இதைச் செய்துவிடலாம். இது, நாம் ஏற்பாடு செய்கின்ற விழா பார்வையாளர்களின் கூட்டம் இவற்றைப் பொருத்து நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயம். பெருங்கூட்டங்களில் இது சாத்தியமில்லைதான்.
பார்வையாளர்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினராக்கலாம். அப்படி செய்ய முடியவில்லை என்றால் பார்வையாளர்கள் முன் சிறப்பு விருந்தினர்களுக்கு உணவு விஷயங்களில் மேடையில் உபசரிப்பதைத் தவிர்க்கலாம். தனியே அதற்கு ஏற்பாடு செய்யலாம்.
பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையைச் சொதப்பி விடுவார்கள்.
நிகழ்ச்சிக்கு அழைத்தவர் ஒருவராக இருப்பார். மேடையில் அறிமுகப்படுத்துபவர் மற்றொருவராக இருப்பார். இதனால் பெரும்பாலான அறிமுக உரைகள் சொதப்பலாகிவிடுகின்றன.
இதனாலேயே நிகழ்ச்சிகளுக்குப் பேச ஒப்புக்கொள்ளும்போதே என்னைப் பற்றிய தகவல்களை எழுத்து வடிவில் விரிவாகக் கொடுப்பதுடன், போனிலும் தெளிவாக மற்றொரு முறை சொல்லிவிடுவேன்.
என் 25 வயதில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். என் பெயரை ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று எழுதி அனுப்பியிருந்தேன். மேடையில் அறிமுகம் செய்து வைத்தவர் எப்படி என் பெயரை குறிப்பிட்டார் தெரியுமா?
‘இப்போது திருமதி. செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி தன் உரையை வழங்குவார்…’
அதோடு விட்டார்களா….
என்னுடன் என் அப்பா வந்திருந்தார். அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி. புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்றார்கள்.
ஆங்கிலத்தில் Miss என்றால் திருமணம் ஆகாத பெண்களையும், Mrs என்றால் திருமணம் ஆன பெண்களையும், Ms என்றால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் ‘செல்வி’ என்பது திருமணம் ஆகாத பெண்களையும், ‘திருமதி’என்பது திருமணம் ஆன பெண்களையும் குறிக்கிறது.
ஆங்கிலத்தில் உள்ளதைப் போல தமிழில் திருமணம் ஆன மற்றும் ஆகாத இருபிரிவினருக்கும் ஒரே அடைமொழியில் குறிப்பிட வார்த்தைகள் இல்லை.
அது சரி… ஆண்களுக்கு Mr என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ஆங்கிலத்தில். தமிழில் ‘திரு’ அவர் திருமணம் ஆகி இருந்தாலும் ஆகாவிட்டாலும்.
அது என்ன பெண்களுக்கு மட்டும் Miss, Mrs, Ms என வரிசையாகப் பட்டப் பெயர்கள் போல…
பொதுமேடையில் பெண்களுக்குத் திருமணம் ஆகியிருக்கிறதா இல்லையா என்ற தகவலை ஏன் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்?
திருமணம் ஆன மற்றும் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் ‘திருமிகு’ அல்லது ‘உயர்திரு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் வராதல்லவா?
பல வருடங்களாகவே, என் நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளின் தமிழ் அழைப்பிதழ்களில் ஆண் பெண் பேதமின்றி திரு, திருமதி, செல்வி போன்றவற்றைத் தவிர்த்து அனைவருக்கும் ‘திருமிகு’அல்லது உயர்திரு’தான்.
மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டுமே!
யோசிப்போம்.
(கட்டுரையாளர் **காம்கேர் கே. புவனேஸ்வரி** காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐ.டி. நிறுவனத்தின் CEO & MD. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர்,தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும்பல பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: compcare@hotmail.com)
[பகுதி 1](https://minnambalam.com/k/2018/11/09/22)
[பகுதி 2](https://minnambalam.com/k/2018/11/16/15)
[பகுதி 3](https://minnambalam.com/k/2018/11/23/27)
[பகுதி 4](https://minnambalam.com/k/2018/11/30/13)
[பகுதி 5](https://minnambalam.com/k/2018/12/07/4)
[பகுதி 6](https://minnambalam.com/k/2018/12/14/8)
[பகுதி 7](https://minnambalam.com/k/2018/12/21/5)
[பகுதி 8](https://minnambalam.com/k/2018/12/28/14)
[பகுதி 9](https://minnambalam.com/k/2019/01/04/22)
[பகுதி 10](https://minnambalam.com/k/2019/01/12/11)
[பகுதி 10](https://minnambalam.com/k/2019/01/12/11)
[பகுதி 11](https://minnambalam.com/k/2019/01/19/12)
[பகுதி 12](https://minnambalam.com/k/2019/01/26/20)
[பகுதி 13](https://minnambalam.com/k/2019/02/02/6)
[பகுதி 14](https://minnambalam.com/k/2019/02/09/4)�,”