qமுதல்வர் மீது செருப்பு வீசியவர் ரிமாண்ட்!

Published On:

| By Balaji

ஒரத்தநாடு பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய நபர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தஞ்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.நடராஜனை ஆதரித்து மார்ச் 31ஆம் தேதி இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை ஒரத்தநாட்டில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் பிரச்சார வாகனத்தின் பின்னால் நின்ற நபர் ஒருவர் முதல்வரை நோக்கி செருப்பை வீசியுள்ளார். ஆனால் செருப்பு முதல்வர் மீது படவில்லை. அருகில் நின்ற வேட்பாளரின் கை மீது பட்டு வாகனத்தின் மீதே விழுந்துள்ளது.

அந்த செருப்பு வாகனத்தின் மீதே வெகுநேரம் இருந்துள்ளது. செருப்பு வீசிய நபரை அங்கிருந்த அதிமுகவினரே பிடித்து அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் காவல் துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் பெயர் வேல்முருகன் என்பதும், ஒரத்தநாட்டைச் சேர்ந்த கோனூர் பஞ்சாயத்து உப்புண்டார்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

வேல்முருகன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிந்ததாலும், அதற்கான சான்றிதழை அவர் வைத்திருந்ததாலும் அவர் மீது வழக்குப் பதியாமல் விடுவிக்க காவல் துறையினர் முதலில் எண்ணியுள்ளனர். ஆனால் வைத்திலிங்கத்தை அவமதிக்கவே அமமுகவினர் இதுபோன்று திட்டமிட்டு செய்துள்ளதாக தஞ்சை அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான மாவட்டப் பஞ்சாயத்து தலைவராக இருந்த அமுதா ரவிச்சந்திரனின் ஊரும் உப்புண்டார் பட்டிதான். அமுதா ரவிச்சந்திரனுக்கு ஒருவகையில் வேல்முருகன் உறவினர் என்றும் சொல்கிறார்கள். இதனால் வைத்திலிங்கம் கடுமையான அப்செட்டில் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய மண்டல ஐஜி வரதராஜு, தஞ்சை டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவு வரை வேல்முருகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலுக்கு வராமல் ஏன் இப்போது வந்தார்? அதனால்தான் செருப்பு வீசினேன். என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?” என்று காவல் துறையைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் வேல்முருகன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவம் ஆவணமாகிவிட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share