கஜா புயலை விட கடுமையான அரசியல் புயலை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் சந்தித்து வருகிறது இலங்கை. இதில் இன்று (நவம்பர் 15) நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, சபாநாயகர் மீது பொருட்களை எறிந்ததும் இலங்கை பற்றிய உலக நாடுகளின் பார்வையை மாற்றியிருக்கிறது. இலங்கையின் இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்துவிடுவோம்.
**ரனில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி**
நேற்று நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷேவை எதிர்த்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்ற நிலையிலும், அதிபர் சிறிசேனா அதை ஏற்கவில்லை. ராஜபக்ஷேதான் பிரதமர் என்று அறிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வந்த ராஜபக்ஷேவும் பிரதமர் நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டு, பிரதமர் போலவே உரையாற்றினார். ஆனால் சபாநாயகர் கரு ஜெயசூர்யா இதை ஏற்கவில்லை. அதனால் சபாநாயகர் மீது காகிதங்கள், குப்பைக் கூடைகள், தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றம் முடிந்து இன்று மதியம் கொழும்பு டவுன்ஹால் பகுதியில், ஜனநாயகம் தேவை என்ற முழக்கத்தை முன் வைத்து ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் பேரணியை நடத்தியது. சில நாட்களுக்கு முன் அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்தும் இதுபோன்ற ஒரு பேரணியை நடத்தியது அக்கட்சி. இன்று ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய பேரணியால் கொழும்பின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியில் பேசிய ரனில் விக்ரமசிங்கே, “நாடாளுமன்றத்தில் நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாடு எங்கள் பின்னால் உள்ளது. எங்கள் அரசை மக்களின் அரசை திரும்ப நிர்மாணிக்க வேண்டும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலுக்கோ, அதிபர் தேர்தலுக்கோ நாங்கள் தயார். முதலில் அதிபர் தேர்தல் நடத்தட்டும், அப்புறம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம். தயாரா?” என்று சிறிசேனாவை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
**நாடாளுமன்றத்துக்குள் கத்தி!**
முன்னதாக இன்று காலை “ராஜபக்ஷேவின் ஆதரவாளர்கள் வன்முறை செய்தனர், நாங்கள்தான் சபாநாயகரை உயிரோடு காப்பாற்றினோம்” என்று ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியினர் சொல்லிவந்த நிலையில் நாடாளுமன்றத்துக்குள் கத்தியை எடுத்து வந்திருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி எம்பி என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
பலித தேவரப்பெருமா என்ற ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்பி இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் கையில் கத்தியோடு நிற்கும் புகைப்படங்கள் இலங்கை ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் பரவி வருகின்றன. இது அக்கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.
**அதிபருக்கு சபாநாயகர் பதில்!**
இன்று காலை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரங்களுக்குப் பிறகு சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதமெழுதி அதை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்.
அக்கடிதத்தில், “ கடந்த 26 ஆம் தேதி அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, இலங்கைக்கு சர்வதேசத்தில் உள்ள நற்பெயர் ஆகியவை மிக வேகமாக சரிவடைந்துள்ளன.
நேற்று நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம் உங்களால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நான் சபாநாயகராக பதவியேற்ற நாளில் இருந்து இப்போது வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் என் காலடிகள் பட்டதில்லை. நான் சபாநாயகருக்கு உரிய மரபைப் பின்பற்றியே வருகிறேன். ஆனால் நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், தனிப்பட்ட முறையில் தாங்கள் உழைத்த நற்பெயரும் கௌரவமும், மிக வேகமாக சரிவடைந்து வருகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
�,”