qமீச்சிறு காட்சி 18: மகாத்மாவின் மினிமலிசம்!

Published On:

| By Balaji

சந்தோஷ் நாராயணன்

**கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்**

மினிமலிச வாழ்வியலுக்கு நமது மண்ணில் உதாரணமாக வாழ்ந்தவர் மகாத்மா காந்தி. குஜராத்தில் வணிகப் பின்னணி கொண்ட வசதியான குடும்பத்தில் பிறந்த காந்தி இந்த எளிமையை எப்படி வந்தடைந்தார்?

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி டேவிட் தோராவின் பாதிப்பு காந்தியிடம் உண்டு. அமெரிக்க கனவு என்கிற வியாபார நுகர்வு சார்ந்த கலாச்சாரம் கட்டி எழுப்பப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாதலையும் இயந்திரமயமாதலையும் சகிக்க முடியாமல் நகர வாழ்க்கையை விட்டு வெளியேறியவர் தோரா. தனிமையில் வால்டன் ஏரிக்கரையில் வாழ்ந்தார். வழக்கமான அரசு இயந்திரங்களின் போக்குக்கு எதிராக மனித உரிமைகளைப் பேசும் அவருடைய “சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்” (குடிமைச் சமூகத்தின் ஒத்துழையாமை) என்னும் நூல் காந்தியிடம் தாக்கம் செலுத்தியதாக அறிகிறோம்.

மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியா முழுக்க அவர் மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் அவர் ஆழமாக நம்பிய ஆத்மிக உணர்வு வழியாக “எளிமையே வலிமை” என்கிற அறிதலை அவர் அடைந்திருக்கக்கூடும்.

காந்தியைப் பற்றிய கதைகளில் ஒன்று. பிரிட்டிஷ் மன்னரைச் சந்திக்க சென்றபோது, காந்தி வழக்கம்போல குறைவான எளிய உடையில் சென்றிருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் “நீங்கள் இவ்வளவு குறைவான உடையுடன் மன்னரைச் சந்திக்கச் சென்றிருக்கிறீர்களே” என்று கேலியாகக் கேட்கவும் காந்தி புன்னகையுடன் சொன்ன பதில் “எனக்கும் சேர்த்து மன்னரே நிறைய உடை அணிந்திருந்தாரே”. கதை உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. ஆனால், அதற்குள் ஒளிந்திருக்கும் செய்தி உண்மையானது.

அட்டன்பெரோவின் காந்தி படத்தில் எனக்கு மறக்க முடியாத காட்சி ஒன்று உண்டு. நேரு உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சி மாற்றத்தைப் பற்றி விவாதிக்க காந்தியின் ஆசிரமத்துக்கு வந்திருப்பார்கள். இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ‘மிகப்பெரிய’ விஷயத்தை பற்றிப் பேச வந்தவர்களைவிட, ஒரு சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டியின் அடிபட்ட காலைப் பற்றி அக்கறையாக விசாரித்தபடி அதன் பின்னால் காந்தி செல்லும் அந்தக் காட்சி. அதுவே காந்தியின் ஒட்டுமொத்த அரசியலையும் ஆத்மிகத்தையும் சொல்லும் இடம்.

நேரு போன்றவர்கள் இந்தியாவைத் தொழிற்சாலைகளும் பொருளாதார வளர்ச்சியும் கொண்ட மேற்கத்திய நாட்டின் நகலைப் போலக் கனவு கண்டுகொண்டிருந்தபோது. காந்தி இந்தியாவின் பொருளாதாரம் எளிய கிராமங்களை சார்ந்து வளர வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். ராட்டை, நூற்பு, ஆநிரைகள், கைவினைகள் என்று எளிய வாழ்வியலின் எளிமையான வடிவமாக இருந்திருக்கின்றன அவருடைய கனவுகள்.

இன்று மினிமலிசத்தைப் பின்பற்ற முனைபவர்கள் “50 பொருட்கள் சவால்” எல்லாம் வைக்கிறார்கள். அதாவது ஒருவருக்குத் தேவையான உடை, கருவிகள், அத்தியாவசியப் பொருட்கள் எல்லாவற்றையும் மொத்தமாக 50க்குள் இருக்குமாறு சுருக்கிக்கொள்வது. இதையே பெரிய தியாகம்போல இணையத்தில் மினிமலிச கம்யூனிட்டிகளுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், காந்தி ஒன்றிரண்டு செட் ஆடைகள், எளிமையான செருப்பு, கண்ணாடி, கைத்தடி, சில பாத்திரங்கள் என்று தன் பிற்காலத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் கழித்தவர். நேரந்தவறாமையின் மீது கண்டிப்பு கொண்டவராதலால் கூடுதலாக ஒரு தொங்கு கடிகாரம்.

எடுத்துக்கொள்ளும் உணவிலும், அவரே கைப்பட சமைப்பதிலும் எளிமையைக் கைக்கொண்டவர் என்பதை எல்லாம் நான் சொன்னால் அது தேய்வழக்காக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மினிமலிசக் கோட்பாட்டுக் கண்களின் வழியே இவற்றை எல்லாம் மறுபார்வை செய்யும்போது அவருடைய ஒவ்வொரு செயல்பாடும் எளிமையின் வாழ்வியலை நமக்குக் கற்றுத்தருவதாக இருக்கிறது.

அவருடைய அரசியல் நிலைப்பாடுகளில் நமக்குக் கருத்து வேறுபாடுகள், விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவருடைய வாழ்வியலிருந்து கற்றுக்கொள்ள நமக்குச் செய்தி இருக்கிறது. அவரே சொன்னதுபோல, “அவருடைய வாழ்வே அவருடைய செய்தி.”

நுகர்வின் எல்லைகள் அழிக்கப்பட்டு எதையும் சுரண்டத் தயங்காத வாழ்வியல் முறைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் அவர் வாழ்விலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தியாக எனக்குத் தோன்றுவது இந்த எளிமைதான். மினிமலிசம் என்கிற கோட்பாடு பேசப்படுவதற்கு முன்பே அவர் தோன்றி மறைந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை மினிமலிச வாழ்வியலுக்கான முன்னுதாரணம்தான்.

(காண்போம்)

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: ensanthosh@gmail.com)

**முந்தைய அத்தியாயங்கள்:**

[அத்தியாயம் 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/07/17/19)**

[அத்தியாயம் 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/07/24/13)**

[அத்தியாயம் 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/07/31/33)**

[அத்தியாயம் 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/08/07/9)**

[அத்தியாயம் 5](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/08/14/27)**

[அத்தியாயம் 6](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/08/21/18)**

[அத்தியாயம் 7](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/08/28/19)

[அத்தியாயம் 8](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/04/21)

[அத்தியாயம் 9](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/11/17)

[அத்தியாயம் 10](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/18/9)

[அத்தியாயம் 11](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/25/10)

[அத்தியாயம் 12](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/03/11)

[அத்தியாயம் 13](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/09/4)

[அத்தியாயம் 14](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/16/5)

[அத்தியாயம் 15](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/23/8)

[அத்தியாயம் 16](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/08/4)

[அத்தியாயம் 17](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/14/5)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share