மதயானைக் கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
2013ஆம் ஆண்டில் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பில் வெளியான மதயானைக் கூட்டம், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்த படைப்பாகும். வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களை படம் பெற்றாலும், பின்வரும் நாட்களில் படத்தின் மீதான பார்வை மாறியது.
வன்முறை, சாதி சார்ந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் என மதயானைக் கூட்டத்தை ஒரு கமர்ஷியல் சினிமாவாகவே தமிழ் சமூகம் தொடக்கத்தில் அணுகியது. ஆனால் சிறு பத்திரிக்கைகளின் சீரியஸான கட்டுரைகள், விமர்சனக் கூட்டங்கள் என சில ஆரோக்கியமான நிகழ்வுகள் மூலம் ரிலீஸுக்கு பின் அதிகம் கவனிக்கப்பட்ட படைப்பாக மாறியது மதயானைக் கூட்டம்.
இனவரைவியல் சார்ந்த முக்கிய பதிவான இப்படம், சாதிப் பெருமைகளை புகழ்வது போல பழித்த வஞ்சப்புகழ்ச்சி வகை படைப்பாகும். பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் வசனம் மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அறிமுகமான படம் இது. மேலும் கதாநாயகனாக கதிரின் அறிமுக படமும் இதுவே. கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மதயானைக் கூட்டதுக்குப்பின், 6 ஆண்டுகள் கழித்து, விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகவுள்ளது.
முப்பரிமாணம் திரைப்படத்திற்கு பின் நடிகர் சாந்தனு பாக்யராஜ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
�,”