ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு உட்பட பல்வேறு அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகமே ஒரு வாரம் ஸ்தம்பித்தது..
20 முறைக்கும் மேல் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தது. அரசின் 2..44 மடங்கு ஊதிய உயர்வைத் தற்காலிகமாக ஏற்றுத் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். .
அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் மீது நீதிமன்ற அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் போராட்டம் நடத்திய 7 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பையும் மீறி போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இன்று பே ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலைநிறுத்தம் 8 நாட்கள் நடைபெற்றாலும், முதல் மற்றும் கடைசி நாட்களில், பாதி நேரமே வேலைநிறுத்தம் செய்யப்பட்டதால், அந்த 2 நாட்களை ஒரு நாளாகக் கருதி 7 நாட்களுக்கு , சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களில் சாதாரண ஊழியர்கள் முதல் மூத்த ஊழியர்கள் வரை அனைவருக்கும் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை அடிப்படையில் ரூ.3,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளத்தைப் பெற முடியாது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் ஒருவர் மின்னம்பலத்திடம் தனது அடையாளத்தை மறைத்துப் பேசினார்.
“அரசின் இந்த நடவடிக்கையால் ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் பாதிப்பு அதிகம் ஏற்படும். ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை விடுமுறையாக எடுத்துக்கொண்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நோ வொர்க் நோ பே என்று அரசு மிரட்டியது. அது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊதியம் பிடித்தது மட்டுமின்றி ஊழியர்கள் விடுமுறை (Absent-A) எடுத்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வார விடுமுறை உட்பட ஒரு ஊழியர் 8 நாள் விடுமுறை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.. இது ஊழியர்களின் சர்வீஸ் ரெக்கார்டில் பதிவிடப்படும். இதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படும். போராட்டத்தில் ஈடுபட்டதற்குத் தண்டனை வழங்கியதுபோல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு ஒரு நாளைக்கு ரூ.753 வீதம் 6 நாட்களுக்குப் பிடித்தம் செய்துள்ளனர்.
இந்த பே ஸ்லிப்பை காலையிலே வழங்கியிருந்தால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற எண்ணத்தில் வழக்கத்துக்கு மாறாக 11 மணிக்கு வழங்கினர். இதற்குத் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.
இதுபற்றி சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன், “அரசின் முடிவு தன்னிச்சையானது. இது பற்றி நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். நாளை போக்குவரத்துக் கழகச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகியான பாலகிருஷ்ணனிடம் பேசியபோது,
“7 நாட்களுக்கு மட்டும் ஊதியம் பிடிக்கவில்லை, ஜனவரி 11ஆம் தேதி வேலைநிறுத்தம் முடிந்த பிறகு ஒரு பாதி ஊழியர்களால் மட்டுமே வேலைக்குச் செல்ல முடியும், அதன்படி வேலைக்குச் செல்லாமல் இருந்த மற்ற பகுதியினருக்கும் விடுமுறை என்று குறிப்பிட்டு ஊதியத்தைப் பிடித்துள்ளனர். வேலைநிறுத்தத்துக்கான குறியீடு S என்றுகூடக் குறிப்பிடாமல் விடுமுறை என்று குறிப்பிட்டது சட்ட விரோதமானது” என்றார் கோபத்துடன்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இந்தக் கோபம் மீண்டும் வேலைநிறுத்தமாக வெடிக்குமா, அல்லது நீதிமன்றத்தில் முறையீடாக இருக்குமா? இதுதான் இப்போதைய கேள்வி.
�,”