qபோதைப்பொருட்கள் செக்ஸின் நண்பனா, எதிரியா?

Published On:

| By Balaji

உதய் பாடகலிங்கம்

எந்நேரமும் பார்ட்டி என்று திரியும் தலைமுறையும், அப்படியொரு வாழ்க்கை தங்களுக்கு வாய்க்காதா என்று ஏங்கும் தலைமுறையும் ஒருசேரப் பெருகிவரும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘வாழ்க்கைன்னா கொண்டாட்டம்னு தெரியாதா’ என்றபடியே, பண்ணை வீடுகளிலும் ரிசார்ட்களிலும் காது கிழியும் சத்தத்துடன் இசையை ஒலிக்கவிட்டுக்கொண்டு, கண்களுக்குள் குத்துவிளக்கேற்றி புது உலகைப் பரப்பும் போதைப்பொருட்களை உடனழைத்துக்கொண்டு, ஆண்களும் பெண்களும் அல்லது தன்பாலினத்தவர் மீது ஈர்ப்புகொண்டு உலாவி வரும் கூட்டமொன்று இருக்கிறது நம் அருகிலேயே.

பொள்ளாச்சி ரிசார்ட் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததாக, சமீபத்தில் சுமார் 160 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கடுத்ததாக, சென்னை கோவளம் அருகேயுள்ள ரிசார்ட் ஒன்றில் மென்பொருள்துறையில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் தடை விதிக்கப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு நூற்றுக்கணக்கில் கைதாகினர். இந்த கைது சம்பவங்கள் கண்டிப்பாக முற்றுப்புள்ளியல்ல என்பது பாமரர்க்கும் தெரியும்.

**மேற்கத்திய மோகத்தின் சாபம்**

மேற்கத்திய உலகின் தாக்கம் நம் வாழ்க்கை மேம்பாட்டில் மட்டுமல்ல; இது போன்ற விஷயங்களிலும் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இந்த விஷயத்தை நாடுபவர்கள் மற்றும் இதனை நோக்கித் தம் கவனத்தைத் திருப்புபவர்களிடம் இருக்கும் கேள்விகளில் ஒன்று, செக்ஸ் எனும் அம்சத்தை போதைப்பொருட்கள் அதிகமாக்குமா அல்லது அறவே இல்லாமல் போக்குமா என்பதே. வெளிநாடுகளில் இதனைச் சோதித்துப் பார்த்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இதையொட்டிப் பல ஆய்வுகளும் கூட மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு குளோபல் டிரக் சர்வே எனும் அமைப்பு சார்பில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் உள்ள 22,000க்கும் அதிகமான மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. கடந்த மாதம் இந்த முடிவுகள் ‘ஜர்னல் ஆஃப் டி செக்ஸுவல் மெடிசின்’ எனும் ஆய்விதழில் வெளியானது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், “செக்ஸ் கொள்வதற்கு முன்னதாகப் போதைப்பொருட்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அவ்வாறு பயன்படுத்துவதால் செக்ஸ் மேம்பட்டு இருப்பதாகக் கருதுகிறீர்களா?” என்ற இரண்டு கேள்விகள் மட்டுமே பிரதானமாகக் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வில் கிடைத்த தரவுகளில் ஒன்று, சுமார் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் மது உட்கொண்டனர் என்பது. குறிப்பாக, செக்ஸ் கொள்வதற்கு முன்னதாகக் கண்டிப்பாக மது அருந்தாமல் இருக்க முடியாது என்று கூறியிருந்தனர். மதுவுக்கு அடுத்தபடியாக கஞ்சா மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை எடுத்துக்க்கொள்ளும் வழக்கம் சிலரிடத்தில் இருந்தது. இதில் பெண்களும் அடக்கம். இதற்கடுத்தபடியாக, எம்டிஎம்ஏ (Methylene Dioxy Methamphetamine)என்று வெளிநாடுகளில் வழங்கப்படும் செயற்கையாகச் செரிவூட்டப்பட்ட போதைப்பொருட்கள், எக்ஸ்டஸி ரகத்தைச் சேர்ந்த கொக்கைன், கீட்டமைன், பாப்பர்ஸ், வயாகரா போன்றவை அனைத்தும் வருகின்றன. இவையனைத்தும் அங்குள்ள கிளப்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எம்டிஎம்ஏ மூலமாக ஜோடிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும் எனவும், செக்ஸ் ஆசையை அதிகப்படுத்த ஜிஹெச்பி / ஜிபிஎல் வஸ்துக்கள் உதவும் எனவும், அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்திருந்தனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இதர ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளை விட பிரிட்டனைச் சேர்ந்த ஆண்களில் பலரும் செக்ஸ் கொள்வதற்கு முன்னதாக இத்தகைய போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது இந்த ஆய்வில் தெரிய வந்தது.

**போதையும் செக்ஸும்**

பொதுவாக, செக்ஸ் சார்ந்து போதைப்பொருட்களை மூன்றாக வகைப்படுத்துகின்றனர். முதலாவது வகையானது, நம் மூளையையும் உடலையும் அடக்கிச் செயல்பாடுகளை மெதுவாக்குவன. மது, ஹெராயின், கஞ்சா, வேலியம், ஜிஹெச்பி எனும் கம்மா ஹைட்ராக்ஸிபுடிரேட் ஆகியன நம் உடலைச் சோர்வுற வைக்கும். மேற்கண்ட வார்த்தைகளில் நன்றாகக் கவனம் செலுத்துவது அவசியம்.

இரண்டாவது வகை போதைப்பொருட்கள் செக்ஸை ஊக்கப்படுத்தும். மெத்தாபீட்டாமைன், எக்ஸ்டஸி, கொக்கைன், சிகரெட்கள் ஆகியன இதில் அடங்கும். முன்றாவது ரகமான ஹாலுசினோஜென் என்பதற்கு மாயத்தைக் காண்பிக்கும் பொருட்கள் என்று கிட்டத்தட்ட அர்த்தம். கீட்டமைன் எனும் போதைப்பொருட்கள் இந்த ரகத்தில் வரும். நம்ம இயக்குனர் மிஸ்கின் இந்த கீட்டமைனுக்குத் தனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் முக்கிய பாத்திரத்தை அளித்திருப்பார். இதனை உட்கொண்டால் நமது பார்க்கும், கேட்கும், யோசிக்கும் தன்மை எல்லாமே மாறும்.

பொதுவாகவே, தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களே இம்மாதிரியான போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. இதனை அர்த்தப்படுத்தியே chemsex எனும் பதம் மேலைநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

**மோசமான எதிர்விளைவுகள்**

செக்ஸுக்கு முன்னரும், செக்ஸின் போதும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் நமது எண்ணவோட்டமே மாறுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் விளைவாக பாதுகாப்பற்ற உறவு முகிழ்த்து, அதனால் பாலுறவுப் பரவு நோய்கள் ஏற்படுகின்றன. ஆண் குறி விரைப்பு பிரச்சினை, முன்கூட்டியே விந்து வெளியாதல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகின்றன.

பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் சிக்கல்கள் உண்டாகின்றன. இது தவிர விபச்சாரம், பாலியல் வல்லுறவு மற்றும் இதர செக்ஸ் சார்ந்த குற்றங்களில் மாட்டிக்கொள்வதற்கும் இந்த பழக்கம் காரணமாகிறது. சில நேரங்களில் முறை தவறிய உறவுகள் ஏற்படுவதற்கும் இது வழி வகுக்கிறது.

அதிகமாக மது அருந்துவதால் செக்ஸின்போது போதுமான விரைப்புத்தன்மை இல்லாமல் போதல், மனநலக் கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், நோய்த்தொற்று, வாய் தொண்டை நுரையீரல் புற்றுநோய், வேலைவாய்ப்பு மற்றும் நிதிப் பிரச்சினைகள் உண்டாகின்றன. அதேபோல ஹெராயின், கொக்கைன் மற்றும் சில போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு உச்சகட்டத்தை எட்டுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எவ்வளவு உட்கொள்கிறீர்கள், எத்தனை மணித்துளி இடைவெளியில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட போதைப்பொருட்களுக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா இல்லையா என்பது தெரிய வரும்.

**போதை தரும் எழுச்சியும் வீழ்ச்சியும்**

ஒருவரது செக்ஸ் வாழ்க்கையை ரோலர்கோஸ்டர் பயணமாக மாற்றவல்லது போதைப்பொருட்கள். வேகமாக மலையுச்சிக்குக் கொண்டு சென்று அதலபாதாளத்தில் தள்ளினால் எப்படியிருக்கும்? இளமையில் போதைப்பொருட்களின் உதவியுடன் செக்ஸ் ஒரு ராஜபோகமாகத் தென்படுவதும், நாளடைவில் அது நரகத்தின் இருப்பிடமாக மாறுவதும், குறிப்பிட்ட அனுபவத்தைப் பெற்றவர்கள் இந்த உலகுக்குத் தரும் அறிவுரைகளில் இருந்து தெரிய வருகிறது. சுருங்கச் சொன்னால், 30 வயதுக்கு மேல் நீங்கள் எடுத்துக்கொள்ளும் போதைப்பொருட்களினால் உங்களது செக்ஸ் திறன் எந்தவிதத்திலும் மேம்படாது. மாறாக, அது வீழ்ச்சிக்குத்தான் காரணமாகும்.

**இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?**

டயட்டில் இருப்பது, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது, தியானம் மேற்கொள்வது போன்றவற்றினால் போதைப்பொருட்கள் மீதான கவனத்தைத் திசைமாற்ற முடியும். ஆனால், அதற்குக் கடுமையான முயற்சியும் பயிற்சியும் அவசியம். கூடவே, இயல்பான செக்ஸ் வழிமுறைகளை மேற்கொள்ளும்போது போதைப்பொருட்கள் எனும் இடைத்தரகர்களுக்கு வேலையில்லாமல் போகும்.

எனக்குத் தெரிந்த ஒருவர் மாமிசம் உண்ணுவதற்கு முன்பாக, மது அருந்துவதைக் கடைப்பிடித்து வந்தார். மது அருந்தியதால் அதிகமாகச் சாப்பிட்ட அந்த நபர், அதையே தொடர்ந்தார். நாளாக நாளாக மது அருந்தினால் மட்டுமே மாமிசம் செரிக்க முடியும் என்ற நிலைக்கு ஆளானது அவரது உணவு மண்டலம். குறிப்பிட்ட நிலையில், அவரால் மாமிசத்தையும் தொட முடியவில்லை. மதுவையும் விட முடியவில்லை. செக்ஸுக்கு முன்னதாகப் போதைப்பொருட்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கமும் கிட்டத்தட்ட அதைப் போன்றதுதான். செக்ஸைப் பொறுத்தவரை அருவியாக விழுந்து அடங்குவதைவிட, நதியாகப் பாய்ந்து பரவுவதே சிறந்தது. அப்படியொரு நிலையைத் தூண்டும் திறன், கண்டிப்பாகப் போதைப்பொருட்களுக்குக் கிடையாது!

உதவி:

https://www.health.com/sex/drugs-commonly-used-with-sex

https://www.narconon.org/blog/how-drugs-affect-your-sex-life.html

https://www.recoveryfirst.org/blog/sex-and-drugs-effects-of-addiction-on-sexuality/

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

.

**

[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share