qபுழல் சிறையில் தொடரும் கைதிகளின் தற்கொலை!

public

இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் என்ற கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறைத்துறையின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை போரூர் அருகே தந்தை மற்றும் மகன் வெட்டிக் கொல்லப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கழிப்பறைக்கு சென்ற கைதி செந்தில் தான் கட்டியிருந்த கைலியைக்கொண்டு சிறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை புழலில் கடந்த 2006ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் மத்திய புழல் சிறை திறக்கப்பட்டது. 221 ஏக்கர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 3000 கைதிகளை சிறையில் அடைக்கக்கூடிய அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக புழல் சிறை விளங்குகிறது. கண்காணிப்புக் கேமிராக்கள், உயரமான மதில் சுவர்கள், கைதிகள் தப்பிச் செல்லாமல் இருக்க மின் வேலிகள் என்று ஏக பாதுகாப்புடன்தான் புழல் சிறை உள்ளது. இருப்பினும், கொலை வழக்குகளில் கைதாகி புழல் சிறைக்குச் செல்லும் கைதிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளை சிறை தண்டனை மூலம் திருந்தி வாழ வழி செய்ய வேண்டும். ஆனால், அந்த சிறையே குற்றவாளிகள் தற்கொலைகள் மூலம் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தற்கொலைக்கூடமாக இருக்கக் கூடாது.

புழல் சிறையில் கைதி செந்திலின் தற்கொலை முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண்ணை வெட்டிக் கொலை செய்த குற்றத்துக்காக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவர் சிறையில் உள்ள மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதே போல, கடந்த மே மாதம் சென்னையில் ஆசிரியை நிவேதாவை கார் ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட மறு நாளே கடந்த மே 8ஆம் தேதி சிறை கழிப்பறை ஜன்னல் கம்பியில் கைலியைக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று மே 29ஆம் தேதி செந்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன் மூலம் புழல் சிறையில் ஒரே மாதத்தில் 2 கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படி கொலை வழக்கில் விசாரணைக் கைதிகளாக புழல் சிறையில் அடைக்கப்படுபவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக நீள்கிறது.

இது குறித்து புழல் சிறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று மே 29ஆம் தேதி பலத்த மழை பெய்த போது கைதிகளை சிறைக் காவலர்கள் கண்காணிக்க முடியவில்லை. அந்த நேரத்தில்தான் செந்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

புழல் சிறையில் தொடரும் கைதிகளின் தற்கொலையைத் தடுத்து நிறுத்துவதோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் பாதுகாப்பை சிறைத்துறை உறுதி செய்ய வேண்டும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *