நீட் தேர்வை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க் கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் திருச்சியில் இன்று (செப்டம்பர் 9) பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து திருச்சியில் நேற்று (செப்டம்பர் 8) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் பாஜகவின் மத்திய அரசுக்கும் தமிழக எடப்பாடி அரசுக்கும் எதிர்க்கட்சிகளின் முக்கியமான எதிர்ப்பாக வெளிப்பட்டது.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வு அனாவசியமாக அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது என்பது நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கூட அதிக இடங்கள் கிடைத்திருக்கிறது. சமூக நீதியும், சம நீதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம், கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் மாணவர்களை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த அரசியல் எதிர்மறையை நினைத்து சனிக்கிழமை (செப்டம்பர் 9) பாஜக சார்பில் திருச்சி உழவர் சந்தையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறியடிக்கவே இக்கூட்டம். நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவே இக்கூட்டம்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.�,”