லட்சுமி ப்ரியா நடிக்கும் ‘பட்சி’ படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
‘லட்சுமி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த லட்சுமி ப்ரியா, நிவின் பாலி நடித்த ரிச்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகும் ‘பட்சி’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ‘தள்ளிப்போறா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை சிவகார்த்திகேயன், கௌதம் மேனன் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜூலை 11) வெளியிட்டனர்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் கதாநாயகனுக்காக ஓப்பனிங் பாடல் என்பது கதாநாயகனையும் அவரது கதாபாத்திரத்தின் மேன்மைகளையும் சொல்லும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். வெகுசில படங்களிலேயே கதாநாயகிகளுக்கான ஓப்பனிங் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதிலும் கதாநாயகியின் அழகை வியக்கும் வண்ணமே அவை உருவாக்கப்படும். ஆனால் லட்சுமி ப்ரியா தோன்றும் ‘தள்ளிப்போறா’ பாடல் கதாநாயகனுக்கு நிகராக கதாநாயகியின் குணநலன்களைச் சொல்வதாக உருவாகியுள்ளது.
புகைப்படக் கலைஞராக வரும் லட்சுமி ப்ரியா கேமராவை தூக்கிக்கொண்டு டூ வீலரில் பயணம் மேற்கொள்கிறார். அதன் பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கிறது.
*“யார் இவளோ*
*களையாத நதியோ*
*கானகம் வழியானதால்*
*தடை மீறியே போகுமா*
*பூ விரலோ”*
என மென்மையாக ஆரம்பிக்கும் பாடல், சரணத்தில் வேகம் எடுக்கிறது. தனக்கான உலகைத் தேடி பந்த பாசம் எல்லாம் கடந்து போகும் பெண்ணாக அவரது கதாபாத்திரம் வரிகள் மூலம் உணர்த்தப்படுகிறது.
*“கண்ணு கூறா வச்சு போறா*
*கன்னி பூவா பூத்து போறா*
*மொத்த ஊரை பார்க்க தேரா*
*மாறி வீதி ஓரம் போறா*
*வஞ்சி போறா மிஞ்சி போறா*
*கொஞ்சம் நேரம் மூச்சு வாங்க*
*பந்த பாசம் தூக்கி வீசி*
*மீறி சீறி போகும் ஆறா”*
கிரிஷ் கோபாலாகிருஷ்ணன் இசையில் முத்தமிழ் பாடல் எழுதியுள்ளார். எம்.எம்.மானசி குரல் கொடுத்துள்ளார். விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாக உள்ளன.
[‘தள்ளிப்போறா’ பாடல்](https://www.youtube.com/watch?time_continue=8&v=7c_2Fh9rHzU)�,