கோதுமைக்கான இறக்குமதி வரியை 20 சதவிகிதமாக உயர்த்தியதையடுத்து சமையல் எண்ணெயின் இறக்குமதி வரியும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் ஏற்றத்தைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகளை ஆதரிக்கும் வகையிலும், ஏற்றுமதியில் நல்ல விலை கிடைக்கவும் சோயாபீன் இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. ஆனால், இது கால தாமதமாகக் கிடைத்துள்ளதால் விவசாயிகளுக்குப் பயனில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் சோயா எண்ணெய் டன் ஒன்றுக்கு ரூ.55,000 என்றளவில் விற்பனை செய்யப்பட்டபோது, உள்ளூர் சந்தையில் ரூ.65,000 முதல் ரூ.66,000 வரை விற்பனையானது. எனவே, இந்த வரியேற்றம் தாமதமாக ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வர்த்தகச் சந்தையில் சோயாபீன் விலை, கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 முதல் 6 சதவிகிதம் ஏற்றத்தைச் சந்தித்து குவிண்டாலுக்கு ரூ.2800 வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் தங்களது விளைபொருள்களில் பெருமளவை கடந்த வாரமே ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்த விலையேற்றம் அவர்களுக்குப் பயனளிக்காமல் போனது.
வேளாண் சந்தை நிபுணரும், SEBI பண்டங்களின் உற்பத்தி ஆலோசனைக் குழு உறுப்பினருமான விஜய் சர்தனா கூறுகையில், “அவர்கள் (மத்திய அரசு) உண்மையிலேயே விவசாய நலனில் கருத்தில்கொண்டு வரியேற்றம் செய்திருந்தால் அதை அக்டோபர் மாதத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பயிர்கள் விதைக்கும் காலத்தில் அறிவித்திருந்தால் விவசாயிகள் முழுப் பலனையும் அடைந்திருப்பர். ஆனால், தற்போது இந்த வரியேற்றத்தால் வர்த்தகர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
�,