பத்திரிகை சுதந்திரம் தடுக்கப்பட்டால் நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சசிகலாவின் தூண்டுதலின் பெயரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, செங்கோட்டையனை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியதாக இந்தியா டுடே பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று செய்தி வெளியானது.
இதனையடுத்து அந்தப் பத்திரிகையின் மீது ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இந்தியா டுடே நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தபோது, ஜனநாயக நாட்டில் உள்ள நான்கு தூண்களில் ஒன்றாகப் பத்திரிகைகள் உள்ளன. பத்திரிகை சுதந்திரம் தடுக்கப்பட்டால் நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் எனவும் பத்திரிகையின் குரல் நசுக்கப்பட்டால் நாடு சர்வாதிகார நாடாக மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.
பத்திரிகைகள் சில நேரங்களில் தவறு செய்ய நேரிட்டாலும் நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் பத்திரிகைகளின் பங்கை நாம் மறந்து விடக் கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, பத்திரிகைகளில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் பத்திரிகைகள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது எனவும், பத்திரிகைகள் நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமையைக் கொண்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதி, இந்தியா டுடே பத்திரிகையின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.�,