நாஞ்சில் கி மனோகரனின் 18ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள நாகர்கோவிலில் பிறந்தவர் நாஞ்சிலார் என்று அழைக்கப்படும் நாஞ்சில் கி மனோகரன். மாணவ பருவத்திலேயே திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டவர்.
1962இல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், 1967, 1971இல் வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் வெற்றிபெற்றவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நாஞ்சிலார் நிதியமைச்சராகவும் வருவாய்த் துறை அமைச்சராகவும் திறமையாக செயல்பட்டவர். திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும் கழக பணிகளை தீவிரமாக செய்தவர்.
கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும்விழாவில் அண்ணா விருதை நாஞ்சிலாருக்கு கலைஞர் வழங்கி சிறப்பித்தார்.
2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நாஞ்சிலார் மறைந்தபோது,“என் கண்ணீரைக் காண்பதற்கு உனக்கும் ஓர் ஆசை- அதை நிறைவேற்றிக் கொண்டாய் – என் இதயத்தில் என்றென்றும் வீற்றிருப்பாய்!” என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
நாஞ்சில் மனோகரனின் 18ஆவது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 1) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து நாஞ்சில் மனோகரன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனுடன் நாஞ்சிலாரின் உதவியாளர் சின்னி கிருஷ்ணன் மற்றும் நாஞ்சிலார் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். மறைந்து 18 ஆண்டுகள் ஆகிய பிறகும் கழக தொண்டர்கள் மறவாமல் நாஞ்சிலாரின் நினைவு நாளை நினைவு கூர்ந்தது தொண்டர்களுடன் அன்புடனும் அக்கறையுடனும் பழகிய ஒரு அரசியல் தலைவருக்கு கிடைத்த சிறப்பாகும்.�,