‘நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை; தொழிற்சங்கத்தினர்தான் கௌரவம் பார்க்கின்றனர்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், ‘போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்திருந்தது. ஆனால், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் நீதிமன்ற உத்தரவைச் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று (ஜனவரி 8) சென்னை உயர் நீதிமன்றம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை நீடிப்பதாகவும் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்குத் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துறைத் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை; போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர்தான் கௌரவம் பார்க்கின்றனர்” என்றும் “கௌரவம் பார்க்காமல் அரசு 23 முறை ஊதிய உயர்வு தொடர்பாகத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “அரசு கடும் நிதி நெருக்கடியிலும் தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி கொடுத்துள்ளது. 15 ஆண்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்வுகாண வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, “தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி விளையாடிவருகின்றனர். தொழிலாளர்கள்மீது அக்கறைகொண்ட தொழிற்சங்கங்கள் அவர்களைப் பணிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசியவர், “அவர்கள் கேட்ட 2.57 மடங்கான ஊதிய உயர்வை ஏற்கனவே வழங்கியாயிற்று” என்றும், “கொல்லைப்புறமாக யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை” என்றும் தொழிற்சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .�,