நமக்குள் தேடுவோம் – 3: ஆசிஃபா
“எல்லார் முன்னாடியும் சந்தோஷமா இருக்கிறதா நடிச்சா, அதவிட காண்டு ஏத்துற விஷயம் எதுவுமே இல்ல” என்ற மீமை முன்பே பார்த்திருக்கிறேன். சமீபத்தில் மீண்டும் அதே கருத்தைச் சொல்லும் பதிவைப் பார்க்க நேர்ந்தது. ஏன் அப்படி நடித்துப் பிறரை வெறுப்பேற்ற வேண்டும்? என்பது அடிப்படையான கேள்வி. அதை பிரிதொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். இந்த நடிப்பு, ஒரு கட்டத்தில் நம்மையே ஏமாற்றத் தொடங்கிவிடுகிறதே, அதைப் பற்றிப் பேச வேண்டும்.
பொய் சொல்லாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், நம்மிடமே நாம் சொல்லும் பொய்கள் எல்லைமீறி போகின்றன, ஒரு கட்டத்தில் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலைக்குச் செல்கிறது. நம்மிடம் நாமே பொய் சொல்லிக்கொள்வது சில வேளைகளில் நமக்கு நல்லதும்கூட. எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டோம். அப்போது, “உன்னால் இதிலிருந்து வெளிவர முடியும்” என்று சொல்லிக்கொள்வது அச்சூழலைச் சமாளிக்க வெகுவாக உதவும். ஆனால், சில நேரத்தில் இதையே நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். எதிர்பாராமல் வரும் சிக்கல் வேறு, நாமே சென்று சிக்கலில் மாட்டுவது வேறு. பலரும் இரண்டாவதைத்தான் செய்கிறோம்.
இந்த விஷயத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, முதலில் நமக்கு நாமே பொய் சொல்லிக்கொள்வதற்கும், ஏமாற்றிக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டும். பொய் என்பது தெரிந்து, சுயநினைவுடன் நாம் சொல்வது, செய்வது; ஏமாற்றிக்கொள்வது என்பது நமக்கே தெரியாமல் sub-conscious மனநிலையில் நாம் செய்வது.
என் நண்பன் ஒருவனுக்குப் படிக்கும்போது பல கனவுகள். சம்பாதிக்கும் பணத்தில் இவ்வளவு புத்தகம் வாங்க வேண்டும்; இவ்வளவு உதவி செய்ய வேண்டும்; இங்கெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும்; எல்லோரையும் போலப் பணத்திற்காக சந்தோஷத்தை விடக் கூடாது என்றெல்லாம் பேசினோம். சமீபத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தது. தனியார் நிறுவனமொன்றில், பிடிக்காத வேலையில் சம்பளம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால் வேலை செய்கிறான். ஒவ்வொரு முறை இவன் வேலையை விட்டுப் போக முயலும்போதும், சம்பளத்தை அதிகமாக்குகிறார்கள். “இதுதான் அஸி வேணும் வாழ்க்கைல. நல்ல வேலை, நல்ல சம்பளம், செட்டில் ஆயிடலாம் இன்னும் ரெண்டு வருஷத்துல” என்றான்.
இதுதான் self-deception. நாம் சொல்வது / செய்வது பொய், நமக்கே முரணான விஷயம் என்பது நமக்கே தெரிந்தால் அது self-deception கிடையாது; அவை வெறும் பொய்கள். அதன் அடுத்த கட்டம்தான் self-deception. பொய்கள் நம் மனதிற்குள் ஊடுருவி, அடிப்படை விஷயத்தை மறக்கச் செய்துவிடுவது.
இதில் நாம் கேட்க வேண்டிய கேள்வி, ஏன் நாம் இப்படிச் செய்கிறோம்? பல காரணங்கள் இருக்கின்றன. என் விஷயத்தில் நான் செய்த மிகப் பெரிய ஏமாற்று வேலை, என் மனநிலை சீராக இருப்பதாக நம்பியது. அழுவது பலவீனம் என்றும், பிறரிடம் பகிர்ந்துகொள்வது ஆபத்து என்றும் நினைத்துக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு. என் உணர்ச்சிகளை, எனக்கு நன்றாகத் தெரிந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் மறைத்துவிட்டு எதுவுமே இல்லாததுபோல இருக்கத் தொடங்கினேன். இது எங்கு சென்று முடிந்தது என்றால், தனியாக இருப்பதுதான் எனக்கு நல்லது என்றும், யாருடைய நட்போ, உறவோ தேவையில்லையென்றும் நம்பும் அளவிற்குச் சென்று முற்றிலும் தனித்துவிடப்பட்டேன்.
பொதுவாகவே, நம்மை ஏமாற்றிக்கொள்ள ஏதேனும் ஒரு யுக்தியைக் கையாளுவோம். சில விஷயங்களைத் தீவிரமாக மறுப்பது; ஒரு நிகழ்வை வேறொன்றாகத் திரித்துப் புரிந்துகொள்வது; நம் எண்ணங்களைப் பிறர் எண்ணங்களாக மாற்றிச் சொல்வது என்று பல வழிகள் இருக்கின்றன. என்ன செய்தாலும், ஒரு கட்டத்தில், நம் மனம் அமைதியாக அந்த விஷயத்தை அணுகினால், நம் ஏமாற்று வேலை நமக்கு நிச்சயமாகத் தெரிந்துவிடும். அதை ஏற்றுக்கொள்கிறோமா என்பதுதான் கேள்வி.
ஒருவரை நமக்குப் பிடிக்கவே செய்யாது, ஆனால் அதை ஒப்புக்கொண்டால் அவமானமாகப் போகும். ‘பிடிக்காமலா இவ்வளவு பழகினாய்?’ என்று கேட்பார்கள் என்று அதை மறைக்கிறோம். ஆனால், அவர் மீதுள்ள ஒவ்வாமை எரிச்சலாக எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த எரிச்சலின் வேரைக் கண்டறியச் சற்று நிதானமும் பொறுமையும் தேவைப்படுகின்றன.
உண்மையை ஒப்புக்கொள்ள நமக்குப் போதிய மனவலிமை இல்லாததுதான் நம்மை ஏமாற்றிக்கொள்வதற்கான முதன்மையான காரணம். உண்மையைச் சொல்லி அதன் விளைவுகளை அனுபவிக்க முடியாமல் பொய்யாகவே இருக்கிறோம். நமக்கு வசதியான ஒரு வாழ்க்கையை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது. குருவிக் குஞ்சுக்குக் கூடு போல நம்மைச் சுற்றி ஒரு alternate realityஐப் பின்னிக்கொள்கிறோம். குருவிக்குப் பறத்தலே மகிழ்ச்சி. ஆனால், நாம் காலம் முழுவதும் அந்தக் கூட்டிற்குள் முடங்கிப்போகிறோம்.
கூட்டிற்குள்ளிருந்து நம்மால் மட்டுமே வெளிவந்துவிட முடியுமா என்பது தெரியவில்லை. நான் இதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவி தேவைப்பட்டது. “நீ உன்னையே ஏமாத்திட்டு இருக்க” என்று முதல்முறையாகக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. பல நாட்கள் அதை என் மனதிலிருந்து அழிக்க முயன்றேன். ஆனால், அதுதான் உண்மை என்று புரிந்தது. அந்த உண்மை என்னை, என் வாழ்க்கையையே பொய்யானதாக மாற்றியது. கடினமான சூழல்தான். அந்த நாட்களைக் கடக்க கஷ்டப்பட்டேன். ஆனால், அதன் பிறகு எனக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது.
எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது; நான் யார், என் குணம் என்ன, என் பலம்-பலவீனம் என்ன, ஒரு செயலுக்கான என் நோக்கம் என்ன என்று பலவற்றையும் கவனித்தேன். நான் செய்திருந்த பல விஷயங்கள் எனக்கே அவமானமாக இருந்தன. அதைக் கடந்து வரும் தைரியம் நமக்கு எப்போது கிடைக்கிறது என்றால், அதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போதுதான். வாழ்க்கையில் யாருமே தவறுகள் செய்யாமல் இருக்க மாட்டார்கள். ச்ய்த தவறை ஏற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான ஒரே வழி. இல்லையென்றால், அங்கேயே நாம் நம்பும் விஷயங்களுக்கு உள்ளேயே தேங்கி விடுவோம்.
[பொய் என்னும் புதிர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/40)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”