Qதிமுகவில் இணையும் அமமுகவினர்!

Published On:

| By Balaji

அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பரணீதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

அமமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அக்கட்சியிலிருந்து விலகி கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து கரூரில் பிரமாண்டமாக விழா நடத்தி தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார். கட்சியில் இணைந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே அவருக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அமமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

அமமுகவின் திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.முத்துசாமி, நிலையூர் கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து கரூர் மாவட்ட அமமுக மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமாரும் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு பிரபு ஆகியோர் தலைமையில் அமமுகவின் நிர்வாகிகள் பலரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 15) நேரில் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது செந்தில் பாலாஜியும் உடனிருந்தார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், கொங்கு மண்டத்தில் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அமமுகவின் மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்தது ஈரோடு மாவட்ட அமமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே அமமுகவில் அதிருப்தியில் உள்ள பல நிர்வாகிகள் திமுகவுக்கு வரவுள்ளனர் என்றும், இதற்காக முயற்சிகளை செந்தில் பாலாஜி எடுத்துவருவதாகவும் கூறுகின்றனர் திமுகவினர்.

இந்த நிலையில் பரணீதரன் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தினகரன் நீக்கியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share