ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செப்டம்பர் 5ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சிதம்பரம் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை. தேனீரைத்தான் அதிகம் குடிக்கிறார். சுமார் 1 மாதத்திற்கு மேலாக திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தின் ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை சிதம்பரம் தரப்பு நாடியது. மனுவில், “சிதம்பரத்திற்கு 74 வயது ஆகிறது. சிறைக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை குழந்தை போல பலகீனமாகிவிட்டது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட பிறகு சிதம்பரம் 4 கிலோ எடை குறைந்துவிட்டார்” என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ப.சிதம்பரம் இன்று (அக்டோபர் 5) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.�,