�மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டங்கள் அமலாக்கத்தைத் தணிக்கை செய்யும் அதிகாரியாக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தணிக்கை செய்ய சுதந்திரமான அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று விதி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தணிக்கை செய்யும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநராக இருக்கும் அண்ணாமலை பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரேம்குமார் இப்பதவியை வகிக்கிறார் என்று விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, அரசுத் திட்டங்கள் குறித்து தணிக்கை செய்யும் ப்ராக்ஸிஸ் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விதிகளை மீறி பிரேம்குமார் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையான அமைப்பு இத்திட்டப் பணிகளைத் தணிக்கை செய்யாவிட்டால் முறைகேடுகளைத் தடுக்க முடியாது எனவும் இம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
நேற்று (நவம்பர் 21) இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், வரும் 27ஆம் தேதிக்குள் இது குறித்துப் பதிலளிக்க தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைச் செயலாளர், ஆணையர் மற்றும் தமிழக அரசின் சமூகத் தணிக்கை பிரிவுக்கு உத்தரவிட்டார்.�,