டிஜிட்டல் டைரி! 18 – சைபர் சிம்மன்
நாடாளும் தலைவர்கள் ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்முதல், நம் நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வரை பல நாட்டுத் தலைவர்கள் ட்விட்டரில் இருக்கின்றனர். இந்த வரிசையில் இணைந்திருக்கும் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரின் புதிய அதிபர் நயீப் புகேலி (Nayib Bukele), ட்விட்டர் பயன்பாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டுசென்றிருக்கிறார்.
ஜூன் 1ஆம் தேதி அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்ட புகேலி, ட்விட்டரில் நாடாளத் துவங்கியிருக்கிறார். ஆம், பதவியேற்ற பின் அவர் மேற்கொண்ட முக்கிய முடிவுகளை ட்விட்டர் பதிவுகளாக அறிவித்திருக்கிறார்.
புகேலியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் பதவி நீக்கங்களாக அமைந்துள்ளன. “நீங்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தை எடுத்துக்கொண்டாக வேண்டும்” எனும் அறிவுரையுடன் அவர் அதிகாரி ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார். பதவி நீக்க உத்தரவுகள் அனைத்தும் ட்விட்டர் வாயிலாக அதிபரால் வெளியிடப்பட்டுள்ளன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எப்.எ.எம்.என். கட்சிக்கும் முன்னாள் அதிபர் சான்சஸ் செரனுக்கும் நெருக்கமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் அதிபரின் உத்தரவைச் செயல்படுத்துவதை ட்விட்டர் மூலமே அறிவித்துள்ளனர்.
புதிய அதிபர் ட்விட்டரில் எடுத்துவரும் அதிரடி முடிவுகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் எல் சால்வடார் நாட்டில் மக்கள் முந்தைய ஆட்சியின் ஊழல் முதலான பிரச்சினைகளால் வெறுத்துப்போயிருக்கும் நிலையில் புதிய அதிபரின் செயல்பாடுகளை நம்பிக்கையோடு பார்க்கின்றனர்.
அதிபர் புகேலி, ட்விட்டரில் பதவி நீக்கங்களை அறிவிப்பதை, வெளிப்படையான நிர்வாகமாகவும் பலரும் பார்க்கின்றனர். ஆனால், இது வழக்கமான பழிவாங்கும் நடவடிக்கை என்று நினைப்பவர்களும் இல்லாமல் இல்லை.
**புத்தாயிரமாண்டின் அதிபர்**
37 வயதில் அதிபராகியிருக்கும் முன்னாள் மேயரான புகேலி, புத்தாயிரமாண்டின் அதிபர் என வர்ணிக்கப்படுகிறார். இளம் வயதில் அதிபரான புகேலி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகச் செயல்பாட்டிலும் சிறந்து விளங்குகிறார்.
அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில்கூட அவர் வழக்கமான பிரச்சார முறையைத் தவிர்த்து ட்விட்டர் போன்ற சாதனங்களைப் பிரதமானமாகப் பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் பிரச்சார விவாதங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. ஊடகங்களுக்கு நேர்காணலும் அளிக்கவில்லை. மாறாக சமூக ஊடகங்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.
சமூக ஊடகப் பிரச்சாரம் வாயிலாக ஆட்சிக்கு வந்துள்ள புகேலி, அதிபராகத் தனது பொறுப்பை நிறைவேற்றவும் ட்விட்டரைப் பயன்படுத்திவருகிறார். பதவி நீக்கங்களுக்கு மட்டுமல்ல, பதவி நியமனங்களுக்கும் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்.
கட்டிடக் கலை மாணவர் ஒருவர், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பைத் தொடராமல் இருப்பது தொடர்பான செய்தி உள்ளூர் நாளிதழ்களில் வெளியானதை அடுத்து, அதிபர் தலையிட்டு, சால்வடார் பள்ளிகளை மேம்படுத்தும் பொறுப்பில் அந்த மாணவர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். காவல் துறைக்கான துணை இயக்குனரையும் அதிபர் ட்விட்டர் மூலமே நியமித்திருக்கிறார்.
இதனிடையே யூடியூப் சானல் ஒன்று, அதிபரின் ட்விட்டர் அதிரடிகளைக் கேலி செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, “உலகின் கூலான அதிபர் இவரா?” எனும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்த வீடியோவை உருவாக்கியவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த புகேலி, சந்தேகத்திற்கு இடமில்லாமல் தானே உலகின் கூலான அதிபர் என்றும் கூறியிருந்தார்.
**சமூக ஊடகங்கள் மூலம் பதவி!**
அதிபர் புகேலியின் ட்விட்டர் ஆட்சி வெறும் ஸ்டண்டாக அமையுமா, அல்லது மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த நிர்வாகத்தை அவரால் தர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமூக ஊடகத்தைப் பிரதானமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவர்கள் அதிகரித்துவருகின்றனர் என்பதைச் சொல்ல எதற்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை.
சில மாதங்களுக்கு முன், உக்ரைன் நாட்டில், நகைச்சுவை நடிகரான விலாதிமீர் ஜெலென்ஸ்கி என்பவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெலென்ஸ்கி அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பது மட்டும் அல்ல வழக்கமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். ‘மக்களின் சேவகன்’(Servant Of The People) எனும், தொலைக்காட்சி – யூடியூப் தொடர் மூலம் பிரபலமான ஜெலென்ஸ்கி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்காமல், யூடியூப், ஃபேஸ்புக் வாயிலான பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)
**
�,”