“தமிழகத்தில் மெடிக்கல் எமர்ஜென்சியை அறிவித்து, டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்குக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (நவம்பர் 1) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒவ்வோர் ஆண்டும் டெங்குக் காய்ச்சல் வந்தாலும், கடந்த ஆண்டு மட்டும் 158-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும், இந்த ஆண்டு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தங்கள் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதிலும், கமிஷன் – கலெக்ஷனில் காலத்தைச் செலவிடுவதிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் தமிழகம் முழுவதும் மூன்று பேர் மரணம், ஐந்து பேர் மரணம் என்றெல்லாம் வரும் அதிர்ச்சிச் செய்திகள் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டுகூட இந்த அதிமுக அரசு மனம் இரங்கவில்லை – மக்களைப் பாதுகாக்க விழித்தெழுந்து உணர்ச்சியோடு பணியாற்றவில்லை என்பது வெட்கக் கேடானது மிகுந்த வேதனைக்குரியது என்று விமர்சித்துள்ள ஸ்டாலின்,
“மற்றவற்றைப் போலவே மக்களின் உயிர்ப்பாதுகாப்பு விஷயத்திலும் அதிமுக அரசு எப்போதும்போல் தூங்கிக்கொண்டிருக்காமல் உடனடியாகத் தூக்கத்தைக் கலைத்து விழித்தெழுந்து உருப்படியாகப் பணி செய்ய முன்வர வேண்டும் . மாநிலத்தில் “மெடிக்கல் எமர்ஜென்சி” அறிவித்து, இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்து விடாத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கிட அதிமுக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ சிகிச்சை முறைகள் பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில் கூட, இந்தக் காய்ச்சல்களால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க முடியாமல் போவது விந்தையாகவே உள்ளது. இதைப்போன்ற காலகட்டத்தில் ஓர் அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டுமோ அதற்கு முரணான வகையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுவதுதான் இந்த வருத்தத்துக்குரிய சூழ்நிலைக்குக் காரணம்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த நோய் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கின்ற தூய பணியினை, அமமுக தொண்டர்கள் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாயம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்கிட வேண்டும். மேலும், டெங்கு நோய் பரவாத வண்ணம், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விளம்பரங்கள் செய்தும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட வேண்டும்” என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.�,