ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டண விதிமுறைகளுடன் உடன்பாட்டுடன் இருப்பதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அதிரடியான அறிவிப்போடு, ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முகேஷ் அம்பானியால் தொடங்கப்பட்டது. இலவச அறிவிப்பு காரணமாக இந்திய மொபைல் பயன்பாட்டாளர்கள் அனைவரும் (4ஜி ஏற்புடைய) ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். முதலில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் மட்டுமே இலவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த அம்பானி பின்னர், இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் இலவச சலுகையை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த அதேநேரம், இந்தியாவின் பிற தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நெட்வொர்க்குகள், தங்களது நீண்டநாள் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்துச் சலுகைகளும் இலவசம் என்று ஆசைகாட்டி, வாடிக்கையாளர்களை தங்களிடமிருந்து ஈர்த்துவருவதாக மேற்கூறிய நிறுவனங்கள் தொலைதொடர்பு ஆணையமான ட்ராய் அமைப்பிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தன. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான வோடஃபோன் ரிலையன்ஸ் ஜியோ மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது. வோடஃபோன் அளித்துள்ள புகாரில், ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அதைக் கட்டுப்படுத்த ட்ராய் அமைப்பு தவறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் டிராய் அமைப்பு முன்னதாக, கடந்த 2002ஆம் ஆண்டில் எந்தவொரு புதிய நெட்வொர்க் நிறுவனமும் 90 நாட்களுக்குமேல் இலவச சலுகை அளிக்கக்கூடாது என்று கூறிவிட்டு, அந்த விதிமுறையை தற்போது ஜியோ விஷயத்தில் மீறிவிட்டதாகவும் வோடஃபோன் குற்றம்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக, ட்ராய் அமைப்பின் சார்பாக ரிலையன்ஸ் ஜியோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது ஜியோ தரப்பிலிருந்து, ‘ஆரம்பத்தில் வெல்கம் ஆஃபர் மூலம் இலவச கால் மற்றும் 4GB டேட்டா வழங்கப்பட்டது. அதிலிருந்து வேறுபட்டு ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மூலம் 1 GB மட்டுமே வழங்கப்படுகிறது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ட்ராய் அமைப்பு ‘இரண்டு சேவைகளும் வெவ்வேறானவை. எனவே, ஜியோ மீதான புகார் செல்லாது’ என்று ட்ராய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
�,