qஜல்லிக்கட்டு இந்து கலாச்சாரம்: ஆர்எஸ்எஸ்!

Published On:

| By Balaji

அண்மைக்கால நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி ஜல்லிக்கட்டு இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதி எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் ஆர்எஸ்எஸ் உயர்மட்ட குழு கூட்டம் மார்ச் 8 முதல் 10 வரை நடந்தது. நாட்டின் நிலை குறித்தும், சமூக மற்றும் மத சூழல் குறித்தும் சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற இந்த கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறினர். நேற்று (மார்ச் 10) இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, “அரசியலமைப்புச் சட்டத்துக்கு தனித்த அதிகாரமும், ஆற்றலும் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சமூகத்தை இயக்க அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே போதாது” என்றார்.

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரிய விழா என்று கூறப்பட்டுவரும் நிலையில், அதனையும் இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இணைத்து சுரேஷ் பையாஜி ஜோஷி குவாலியரில் பேசியுள்ளார். சில நீதிமன்ற தீர்ப்புகளைச் சாடிய சுரேஷ் பையாஜி ஜோஷி, “இந்து கலாச்சாரத்திற்கு எதிராகச் சதி செய்யப்படுகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கத் தடை போடப்படுகிறது. காளை அடக்கும் நிகழ்வான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவற்றை சதி என்று நாங்கள் எண்ணுகிறோம். இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்தியர் அல்லாதவர்களே இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்கள் இந்துக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தாக்கிவருகிறார்கள். ” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு மற்றும் அயோத்தி வழக்கு தாமதம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஜோஷி, “சமுதாயம் அரசியலமைப்பின்படி இயங்குவதைப் போல, நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின் அடிப்படையிலும் இயங்க வேண்டும்” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share