சேவை வரி வழக்கில் டிசம்பர் 11ஆம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை (2016-ல் 2 முறையும், 2017-ல் 2 முறையும், 2018 -ல் 1 முறையும்) சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது [விஷால்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/17/99) நேரில் ஆஜராகினார். அதனைத்தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய விஷால், தன் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், டிசம்பர் 11ஆம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.�,