qசெக்ஸ் ஆர்வத்தைப் பாதிக்கும் மன அழுத்தம்!

Published On:

| By Balaji

எமிலி நகோஸ்கி

பதற்றம், கவலை, சோர்வு மூன்றும் இணைந்தால் செக்ஸ் உந்துதல்கள் காணாமல் போகும். அதனைத் தவிர்க்க, இணையுடனான நெருக்கத்தை அதிகமாக்க, என்ன செய்யலாம்?

சமீபத்தில் நடந்த கருத்தரங்கொன்றில் பேசியபோது, பல ஆண்டுகளுக்குப் பிறகும் தம்பதிகளுக்கு இடையே செக்ஸ் உறவைத் திருப்தியாக வைத்துக்கொள்வது எப்படி என்பது குறித்துப் பேசினேன். நான் சொன்ன கருத்துகள் யதார்த்தமானதாகவும் உதவிகரமானதாகவும் இருந்ததாகச் சிலர் கூறினர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் சிலரோடு மாலையில் ஒரு விருந்தில் கலந்துகொண்டேன். அப்போது செக்ஸ் குறித்துப் பேசினோம். “சில நேரங்களில் செக்ஸ் விருப்பமற்றதாக இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். எவ்வளவுதான் இணையை விரும்பினாலும், சில நேரங்களில் ஆசை காணாமல் போகிறது. அதிலிருந்து மீள என்ன செய்வது?” என்றார் ஒரு பெண்.

செக்ஸ் இல்லாமல் போவதற்கு, அதன் மீதான ஆசை குறைந்துபோகிறது என்பது அர்த்தமல்ல. ஆசை இல்லாமல் போகும்போது, இருவருக்கும் இடையேயான காதல் குறித்த கேள்வி எழுகிறது இணையின் மீது சந்தேகம் எழுகிறது அல்லது உறவு குறித்த கவலை ஏற்பட்டு, செக்ஸ் ஆசை இல்லாமல் போவதனால் உறவே உடைந்து போகிறது.

தன்னையோ, இணையையோ, இருவருக்கும் இடையிலான உறவையோ விமர்சிக்காமல், செக்ஸ் குறித்த எண்ணங்கள் ஏன் குறைந்தது என்று ஒருவர் சிந்திக்க வேண்டும். அப்போது, அழுத்தமே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கும். இது கண்டிப்பாக மோசமான விஷயம்தான். ஏனென்றால், இந்த உலகில் அழுத்தத்துக்கு ஆளாகாத மனிதர் என்று எவருமில்லை. ஆனால், இதனை எதிர்கொள்ளச் சில விஷயங்களைச் செய்தால் போதும். ‘அந்த’ விஷயத்தில் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிடுவோம்! அந்த உரையாடலின்போது, அந்தப் பெண்களிடம் கூறியதையே உங்களிடமும் பகிர்கிறேன்.

**மனமே காரணம்**

முதலில் செக்ஸ் குறித்த செயல்பாடுகள் மூளையில் எவ்வாறு நடைபெறுகின்றன என்று அறிய வேண்டும். மூளையில் செக்ஸ் உந்துதலை துரிதப்படுத்தும் அமைப்பொன்று உள்ளது. சுற்றுச்சூழலில் இருக்கும் செக்ஸ் ஆசையை உசுப்பேற்றும் காரணிகளோடு தொடர்புடையது இது. செக்ஸ் தொடர்பான விஷயங்களைப் பார்ப்பது, கேட்பது, முகர்வது, தொடுவது, சுவைப்பது அல்லது செக்ஸ் தொடர்பான எண்ணங்களை மூளையில் தூண்டிவிடும் குறிகள் மூலமாக, இந்த சிக்னல் ஆன் செய்யப்படுகிறது.

உதாரணமாக, செக்ஸ் தொடர்பான விஷயங்களைப் படிக்கையில் சிலருக்குத் தூண்டல் ஏற்படும். இணையின் உடலில் இருந்து எழும் மணம், தோளில் பதியும் அவரது உதட்டுத் தடம், அவருடனான காதல் அனுபவம் என்று இந்த தூண்டுதல்கள் பல வகைப்படும்.

அதேபோல, மூளையில் செக்ஸ் ஆசைகளுக்கு அணைபோடும் அமைப்பும் உள்ளது. இது வெட்கத்தினால் உண்டாகும் தடையல்ல. இது செக்ஸ் ஆசையைக் குறைக்கும் வகையில் தடுப்பாக அமையும். முன்பே சொன்னதுபோல செக்ஸ் தொடர்பான உந்துதல்களைப் பெறும்போது இப்போது இது தேவையில்லை என்று இந்த அமைப்பு அதனைத் தடை செய்யும்.

அடுத்த அறையில் குழந்தைகள் விழித்திருக்கிறார்கள். பணியில் ஏற்பட்ட மன உளைச்சல். இணையுடன் ஏற்பட்ட பிரச்சினை. உங்கள் உடல் குறித்தான மகிழ்ச்சியின்மை என்று இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.

செக்ஸ் ஆசை எழாமல் இருப்பது, நெருக்கம் குறைவது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக மூளையில் அதற்கான தூண்டல் பகுதியைச் செயல்படுத்த முனையலாம். விளையாட்டு, பொம்மைகள் என்று காமத்தை எப்படியெல்லாம் தூண்ட முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் நீங்கள் ஈடுபடலாம். மூளையில் எந்த அளவுக்கு செக்ஸ் ஆசை தடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பிரச்சினைகள் பெரிதாக இருக்கும். உறவுமுறைச் சிக்கல்கள், வலி வேதனைகள், உடலமைப்பு குறித்த கவலை முக்கியத் தடுப்புக் காரணிகளாக இருக்கின்றன. ஆனால், முக்கியமான குற்றவாளியாக, இந்தக் காரணிகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது ஒன்றுதான். அதன் பெயர் அழுத்தம். இது உங்கள் வேலையினாலோ, குடும்பத்தினாலோ ஏற்படலாம். உறவு முறை குறித்த அழுத்தமாக இருக்கலாம். உடலமைப்பு பற்றி ஏற்படலாம். செக்ஸ் குறித்த கவலைகளாலும் இது உண்டாகலாம்.

ஹேண்ட் பிரேக் உள்ள ஒரு காரை நீங்கள் ஓட்டுவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் விரும்புமிடத்துக்குச் செல்ல நினைத்தாலும், அதிக நேரம் எடுத்துக்கொள்வீர்கள். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். என்ஜின் பாதிப்படையவும் வாய்ப்புண்டு. அதேபோலத்தான் உங்களது செக்ஸுவல் செயல்பாடுகளிலும் தூண்டல், தடை அமைப்பு உள்ளது.

நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது, செக்ஸில் ஈடுபட அதிக நேரமும் முயற்சிகளும் மேற்கொள்வது சாதாரணமான ஒன்று. நீங்கள் உடைந்துவிடவில்லை. பொருத்தமற்ற இந்த உலகத்தில், இந்த விஷயத்தில் மிகச்சரியாக இப்படித்தான் மூளை வேலை செய்யும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வேகமாகத் தடை அமைப்பு விலகும் என்பது நிச்சயம் முரண்பாடுதான். இதனைச் சரி செய்வது எளிதென்றாலும், அதற்கு முதல் படியாக, அழுத்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

**அழுத்தத்தைப் புரிந்துகொள்வது**

அழுத்ததை எதிர்கொள்வது என்பது அட்ரினலின், கார்டிசோல் மற்றும் நம் உடலிலுள்ள வேறு சில சுரப்பிகள் சம்பந்தப்பட்டது. அழுத்தத்தை எதிர்கொள்வது என்பது வெறும் எதிர்கொள்ளல் மட்டுமல்ல; அது ஒரு சுழற்சி.

உதாரணமாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் நீங்கள் வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது, ஒரு சிங்கத்தைப் பார்க்கிறீர்கள். அப்போது உங்களது உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் சுரப்பிகள் சுரக்கும்போது என்னவாகும்? நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.

உங்களைச் சிங்கம் தின்றுவிட்டால், செக்ஸ் வாழ்க்கை என்ற பிரச்சினையே எழாது.

நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள் என்பது இரண்டாவது வாய்ப்பு. இவ்வாறு நிகழ்ந்தால் ஏதேனும் மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்று உதவியைப் பெற்று, சிங்கத்தைக் கொன்று, உங்களைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். நீங்களும் உங்களது இணையும் சிங்கத்தைச் சமைத்துச் சுவைப்பீர்கள். அடுத்த நாள் காலையில் சிங்கத்தின் தியாகத்துக்கு நன்றி சொல்வீர்கள். எச்சரிக்கை, செயல், பாதுகாப்பு, கொண்டாட்டம் என்று இந்த சுழற்சி இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, இன்றைய நாட்களில் சிங்கம் உங்களைத் துரத்துவதில்லை. ஆனாலும், நமது உடலில் உள்ள சுரப்பிகள் சிங்கம் துரத்தியபோது நேர்ந்தது போலவே இப்போதும் செயல்படுகின்றன. ஆபீஸ் மீட்டிங்கா, துணையுடன் சண்டையா, ஜீன்ஸில் கால் நுழையவில்லையா? எந்தப் பிரச்சினை என்றாலும், மண்டைக்குள் சிங்கம் துரத்துகிறது.

சிங்கம் துரத்தும்போது, ‘இன்னிக்கு நைட் கொண்டாடலாமா ஸ்வீட்டி’ என்றா கேட்போம்? இந்தப் பிரச்சினைகளின்போதும் அவ்வாறே எதிர்வினை ஆற்றுகிறோம். “விளையாடுறியா, குழந்தைகள், பில்கள், விதவிதமான உணவுகள், சமூக அநீதிகள், வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் எப்படி உறவு கொள்வது?” என்று கேட்கிறீர்கள்.

பிரச்சினைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு, தடைகளை அழுத்திக்கொண்டு நிற்கிறோம். இதுதான் உண்மையான பிரச்சினை.

இதிலிருந்து மீள வேண்டுமானால், இந்த சுழற்சியை முடித்து, செக்ஸ் தடையை விலக்க வேண்டும்.

**செயலைப் பூர்த்தி செய்**

அழுத்தத்தை எதிர்கொள்வதும், அழுத்தத்திற்குக் காரணமானவர்களை எதிர்கொள்வதும் இப்போது வெவ்வேறாகிவிட்டது. இதனால், அழுத்தத்தை எதிர்கொள்ளும் வழிகளை அறிந்தாலும், உங்களது மூளையில் தடைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். சிங்கம் துரத்தியபோது இரையாகாமல் தப்பிப்பதோடு, உங்களை அழுத்தத்துக்கு உள்ளாகும் ஹார்மோனும் காணாமல்போகும்.

இப்போது, உடன் வேலை பார்க்கும் ஒருவர் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவதாக வைத்துக்கொள்வோம். அமைதியாக இருந்தோ, மேலதிகாரியுடன் பேசியோ, வேலையில் முன்னேற்றத்தைச் செயல்படுத்தியோ, உடனிருப்பவர் தரும் அழுத்தத்தைச் சமாளிப்பீர்கள். அந்தப் பிரச்சினையைக் கையாளும் முறையும் இதுதான்.

ஆனால், அவ்வாறு நீங்கள் பிரச்சினையை எதிர்கொள்வதால், அழுத்தத்தை எதிர்கொள்வது பூர்த்தியாகாது. அந்த நபர் மீண்டும் அதையேதான் செய்வார்.

சிங்கம் துரத்தும்போது என்ன செய்வோம்? ஓடுவோம். குடும்பம், வேலை, செக்ஸ் பற்றிய அழுத்தம் ஏற்படும்போதும், நீங்கள் ஓட வேண்டும், நடக்க வேண்டும் அல்லது யோகா உள்ளிட்ட மனதை நிம்மதியாக உணரவைக்கும் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். உடல் செயல்பாடுதான், இந்த சுழற்சியைப் பூர்த்தி செய்யும்.

இசை வல்லுநர்கள், இதுமாதிரியான நேரங்களில் பாட வேண்டும் என்பார்கள். எம்ப்ராய்டரி தைப்பது, சமைப்பது, வரைவது என்று கற்பனையைத் தூண்டும் எல்லா வேலைகளும் மனதுக்கு நிம்மதியையும் பாதுகாப்பையும் தரும்.

அழுத்தத்தைச் சமாளிக்க அற்புதமான வழி நடனமாடுவது. உடல் செயல்பாடு, கற்பனை வெளிப்பாடு, சுழற்சியைப் பூர்த்தியாக்கும் வழிமுறை என்று எல்லாமே இதில் உண்டு.

**ஆற்றுதலின் பலம்**

சமூகத்துடனான தொடர்பு அழுத்தத்தை இல்லாமல் ஆக்கும் என்கின்றன ஆய்வுகள். டீக்கடைக்காரர், பேருந்து ஓட்டுநர், பக்கத்து அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்று சிலரைச் சந்திக்கும்போது, நம் உடலில் நிகழும் வேதி மாற்றங்கள் மட்டுப்படும். உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரும் எதிரிகள் அல்லர் என்று புரிந்துகொள்வீர்கள். குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், இணையோடு சேர்ந்து சிரித்து மகிழ்ந்தால் இன்னும் நலமாக இருக்கும்.

நெருக்கத்தில் சிறப்பானது இணையுடனான சமூகத் தொடர்பு. ஆறு நொடிகள் இணையை முத்தமிடும்போது ஒருவருக்கொருவர் ஏற்படும் நெருக்கம் அளவிட முடியாதது என்கிறார் திருமண ஆலோசகர் ஜான் காட்மேன். கவனிக்கவும், ஒரு நொடி நீளும் ஆறு முத்தங்கள் அல்ல. ஆறு நொடிகள் அல்லது அதற்கு மேலும் நீளும் ஒரே முத்தம். ஆனால்,

முதன்முறை பார்ப்பவரை நீண்ட நேரம் எப்படி முத்தமிட முடியும்? உங்களுக்காக இருக்கிற, உங்கள் மீது நம்பிக்கை கொண்ட, நீங்கள் மகிழ்ச்சி கொள்கிற ஒரு நபரிடம்தான் அப்படிப்பட்ட முத்தத்தை எதிர்பார்க்க முடியும்.

மன அழுத்தத்தை மேலாண்மை செய்யும் முறையில், 30 நொடிகளுக்குக் கட்டிப்பிடிக்கச் சொல்லித் தரப்படுகிறது. இதனைச் சாந்தமடையும் வரை அணைப்பில் இருப்பது என்கின்றனர். 30 நொடி அல்லது அதற்கு மேல் அணைப்பில் இருக்கும்போது பாதுகாப்பு உணர்வு உண்டாகிறது; சிங்கத்திடம் இருந்து தப்பித்துவிட்டாற்போலத் தோன்றுகிறது; நீங்கள் கொண்டாட்டத்துக்கான இடத்தில் இருப்பதாக உணர வைக்கிறது.

**மாயவட்டம் எனும் இலக்கு**

இவை அனைத்தையும் மேற்கொண்டால், நாம் எதிர்பார்த்த முக்கியமான கட்டத்தை அடையலாம். இனிமேல் செக்ஸுக்கு நீங்கள் தயாராகலாம்.

உடனே ப்ளூ பிலிமில் வருவதுபோல மிருகத்தனமான புணர்ச்சியை எதிர்பார்க்கக் கூடாது. உங்களுக்கான நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்துகொள்ளுங்கள். குழந்தைகள், வேலை, கடன் என்று அத்தனை அழுத்தத்தையும் தொலைத்துவிட்டு படுக்கையில் விழுந்து, உங்களது இணையின் சருமத்தைத் தொட்டுப் பாருங்கள். அதன் பின் மாற்றங்கள் தானாக நிகழும்.

**மூடுக்காகக் காத்திருக்கலாமா?**

சிலர் தாங்கள் மூடு வரும் வரை காத்திருப்பதாகச் சொல்வார்கள். அழுத்தம் சூழ்ந்திருக்கும்போது அவ்வாறு காத்திருந்தால், காலமெல்லாம் தனித்திருந்து புலம்ப வேண்டியதுதான். இது அழுத்தத்தை மேலும் அதிகமாக்கிவிடும். விரக்தி, பிரிவு, கவலை, உறவு முறிவு என்று வாழ்க்கை சின்னாபின்னாமாகிவிடும்.

மூளையில் உள்ள தடையை விலக்கி, தூண்டுதலை உண்டாக்கினால் தானாக மூடு உருவாகும்; அதுவே போதுமானது. தடையை விலக்க, உங்களுக்குப் பிடித்தமானவருடனான காதல் சுழற்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

நன்றி: [எக்ஸ்பீரியன்ஸ் லைஃப்](https://experiencelife.com/article/how-stress-affects-your-sex-drive/)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment