‘கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் அதை நாம் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்’ என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் இன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. சாதி, மத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக கலகக்குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதிகளில் முன்னோடியும் முக்கியமான நபரும் ‘நரேந்திரநாத் தத்தா’ என்ற இயற்பெயர்கொண்ட விவேகானந்தர் முக்கியமானவர். மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆன்மிகத் தலைவர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கொல்கத்தாவில் ஜனவரி 12, 1863இல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறியபோது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக்கொண்டார்.
இறை உண்மைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, ராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன்முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. ராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்துகொள்ள முடிந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897இல் ‘ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார்.
கங்கை நதிக்கரையில் பேலூரில் அவர் கட்டடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். இந்திய பண்பாட்டின் மீதும் அதன் வேர்களின் மீதும் சர்வதேச கவனம் குவியும் வகையில் சிகாகோவில் அவர் ஆற்றிய உரை மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.
‘செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து. அதிலிருந்து நல் செயல்கள் விளையும்’ என்று கூறி அதன்படி வாழ்ந்து காண்பித்தவர்.
1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவரின் நினைவைப் போற்றுவோம்.
– வீரசோழன் க.சோ.திருமாவளவன்
�,