qசிறப்புப் பேட்டி: பார்பரா ஹாரிஸ் வொயிட் – 3

public

பார்பரா ஹாரிஸ் வொயிட், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியையாக பணியாற்றியவர். மேலும் இந்தியாவின் முறைசாரா பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர். இந்தியாவின் முதல் பத்திரிகையாக கருதப்படும் ‘மெட்ராஸ் கூரியர்’ இவரிடம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியுள்ளது. அதில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வெளியான டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையானது, நாட்டின் ஜனநாயகம், விவசாயம், கறுப்புப் பணம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று விளக்குகிறார் பார்பரா ஹாரிஸ் வொயிட். இது அவரது நேர்காணலின் மூன்றாவது பகுதி.

[முதல் பகுதி](https://minnambalam.com/k/1485628213)

[இரண்டாவது பகுதி](https://minnambalam.com/k/1485714609)

**பணமதிப்பழிப்பு நடவடிக்கை போன்ற கடுமையான பரிசோதனை முயற்சிக்கு பின்னால் என்ன மாதிரியான உள்நோக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?**

உள்நோக்கத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு, இத்திட்டத்தின் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டவை பற்றி தெளிவு பெற வேண்டியது அவசியம். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நவம்பர் 8ஆம் தேதி திடீரென வெளியானது. அதற்கான எந்தவித முன்னறிவிப்புகளும் இல்லை. இத்திட்டத்துக்கான நோக்கங்களாக முன் வைக்கப்பட்டவை: ஊழல், கறுப்புப் பணம்/கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதம் முதலியவற்றை ஒழித்தல்.

டிசம்பர் 27ஆம் தேதி இந்த திட்டம் நிறைவற்றப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். எனினும் இத்திட்டம் மீளாய்வு செய்யப்படவில்லை.

சிறிய அளவிலான ஊழல் மட்டுமே ரொக்க பரிவர்த்தனையில் நடைபெறுகிறது. பெரிய அளவிலான ஊழல் மின்னணு பரிவர்த்தனையாகவோ ரகசிய பரிவர்த்தனைகளாகவோ நடைபெறுகின்றன. ரொக்க பொருளாதாரத்தின் (cash economy) அளவுக்கும், ஊழல் அதிகரிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

மாநில அதிகாரிகளே நேரடியாக தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகள் கூட மாநில அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. ரூபாய் நோட்டுகள் தன்னளவிலே கறுப்புப் பணமாகவோ, வெள்ளைப் பணமாகவோ இருப்பதில்லை. அவை அவற்றின் இடத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பதைப் பொறுத்தே அது அமைகிறது. முறையான சீர்திருத்தத் திட்டங்கள் மற்றும் அமலாக்கத் துறையின் அதிகாரம் ஆகியவை இல்லாதவரை இந்த கறுப்புப் பண செயல்பாடுகள் தொடரும்.

கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பது, பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாக கூறுப்படுவதும் ஏற்றுக்கொள்ள இயலாதது. கள்ள நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகையில் பிடிபட்டாலே ஒழிய, புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளுக்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் இல்லை. புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் கள்ள நோட்டுகளின் மதிப்பு 0.0002 முதல் 0.0008 சதவிகிதம் வரை மட்டுமே. எனவே இதற்கான முக்கியத்துவத்தை முறையான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது.

அடுத்தது, தீவிரவாதம். அதிகளவு கள்ளப் பணம் புழங்குவதாகவும், அது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டது. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை தடை செய்து, புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்காது என்று கூறப்பட்டது. ஆனால் காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுகள் அதற்குள் எப்படி தீவிரவாதிகளின் கைக்கு சென்றன? பணமதிப்பழிப்பு நடவடிக்கை, தீவிரவாதத்தை ஒழிப்பதில் எவ்வளவு பங்காற்றியுள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எலியை விரட்டுவதற்காக வீட்டை கொளுத்திய கதைதான் இது.

முதலில் இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஆளும் பாஜகவினரால் அதிகள் சிலாகிக்கப்பட்டதற்கு காரணம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல். இதன் மூலம் எதிர்க் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய முயன்றனர். இந்த காரணம் பொருளாதார நிபுணர்களால் பெரிதாக விவாதிக்கப்படவில்லை.

**இது பொருளாதாரத்தில் ஏற்படுத்தவிருக்கும் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகள் பற்றி கூறுங்கள்**

குறுகிய கால விளைவு: அடுத்த சில மாதங்களுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டை உபயோகிப்பதே சவாலான காரியமாக இருக்கும். சில்லறைத் தட்டுப்பாடு பெருகும். ஏற்கனவே கூறியபடி வருமானமும் விற்பனையும் குறைந்து வருகிறது. விவசாயத் துறை (2.5 கோடி), கட்டுமானத்துறை (4.5 கோடி), வேளாண் துறை மற்றும் மின்விளக்கு தயாரிப்புத் துறை (சூரத்தில் 40,0000 பேர் மற்றும் திருப்பூரில் 40,0000 பேர்) ஆகியவற்றில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தையும் சேமிப்பையும் இழந்துள்ளனர்.

பெரும் செல்வந்தர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ரொக்க பரிவர்த்தனையை சார்ந்துள்ளனர். எனவே அவர்களுக்கு இத்திட்டத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்கப் போவதில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையிலும் பணமதிப்பழிப்பு பொருளாதார சமத்துவமின்மையை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் நடப்பு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் 2 சதவிகித சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் மதிப்பிட்டுள்ளார். இது பொருளாதாரத்தில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும்.

நீண்ட கால அளவில் இரு முக்கியமான விளைவுகளை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, வங்கிகளில் டெபாசிட் அதிகரிப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் வட்டி விகிதம் குறைக்கப்படும். இதனால் கடன் பிரச்னைகள் குறையும். தயாரிப்புப் பணிகள் வேகமெடுக்கும்.

இரண்டாவது, எதிர்மறை விளைவு. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் GDP-ல் ஏற்படும் ஒவ்வொரு இழப்பும் வருவாயில் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும். இது வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு செய்யப்படும் முதலீடுகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். வட்டி விகிதம் குறைவதால் மட்டும் எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடாது. வருங்காலத்தில் வருவாயை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் அதிக முதலீடுகள் தேவைப்படும். இது அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளின் வருகைக்கே வழி வகுக்கும்.

**ஒரு அரசியல் பொருளாதார நிபுணராக, இத்திட்டம் இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்களா?**

இந்த கேள்விக்கு நிச்சயமாக *ஆம்* என்றுதான் சொல்வேன். இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களின் ஆற்றலையும் அதன் மனிதவளத்தையும் நம்பித்தான் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

நன்றி: [மெட்ராஸ் கூரியர்]( http://www.madrascourier.com/barbara-harriss-white-on-demonetisation-part-2/)

தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0