பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு சிங்கப்பூர் நாட்டின் லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பிற நாட்டினாரும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த பொங்கல் கொண்டாட்டம் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் கொண்டாடப்படும் பொங்கல் சிங்கப்பூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்கள், வண்ணப் பானைகள், கரும்பு, தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள கடைகளில் மக்கள் வாங்கி சென்றனர்.
பொங்கல் தினத்தன்று மாலையில் சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கலந்து கொண்டார்.
லிட்டில் இந்தியாவில் உள்ள கேம்பல் லேனில் நடைபெற்ற கூட்டுப் பொங்கலில் இந்தியர்கள் மட்டுமல்லாமல், பிற நாட்டினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் வைக்கும் போட்டியில் 30 குழுக்கள் பங்கேற்றன.
அதேபோல்,புக்கிட் பாஞ்சாங் குடியிருப்புப் பகுதிகளிலும்,பொங்கல் விழா ஆண்டுதோறும் குதூகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சாதி,சமயத்தில் வேறுபட்டு காணப்பட்டாலும், தமிழரின் பண்டிகையான பொங்கல் பண்டிகை அனைவராலும் ஒற்றுமையாக கொண்டாடப்படுவது தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட 46 வெளிநாட்டு பயணிகள் தூத்துக்குடியில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடியது நிகழ்வு குறிப்பிடத்தக்கது.�,