�
நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவிகிதமாகக் குறையும் என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி பாராளுமன்றத்தில் இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடப்பு 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய புள்ளியியல் அமைப்பு தனது மதிப்பீட்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்திருந்தது. அதேபோல, காலாண்டு வாரியாக ஏப்ரல் – ஜுன் காலாண்டில் 7.2 சதவிகிதமும், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 7.4 சதவிகிதமும், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 7 சதவிகிதம் என இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருப்பதாக தனது அறிக்கையில் மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவடையும்நிலையில், இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான நோமுரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும், 2018ஆம் ஆண்டில் 7.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் நோமுரா மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2015-16 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.9 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,