qகோரக்பூர்: ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம்!

public

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் விசாரணை அறிக்கையில் குழந்தைகள் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்பட்டுள்ளதாக சிஎன்என் – நியூஸ் 18 தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 14ம் தேதி வரை 63 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தனர். இந்த மாபெரும் துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணம், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கிவந்த நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.67 லட்சம் தொகை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த தொகையைக் கேட்டு அந்த நிறுவனம் பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் தராததால் இறுதியாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதுவே, மருத்துமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. மேலும், இந்த தொகை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகத்திலுள்ள சிலர் கமிஷன் சதவிகிதத்தை உயர்த்தி கேட்டதே என்றும் கூறப்பட்டது. ஆனால், குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலதரப்பினரும் பெரிய அளவில் விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில அரசு, குழந்தைகள் உயிரிழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ராஜீவ் மிஸ்ராவைப் பணி நீக்கம் செய்தது. மேலும், 63 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த மாநில தலைமைச் செயலாளர் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணைக் கமிஷனின் 2 பக்கம் கொண்ட அறிக்கை சிஎன்என் – நியூஸ் 18 தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அதிலுள்ள தகவல்களை இன்று (ஆகஸ்ட் 17) செய்தியாக வெளியிட்டுள்ளது.

விசாரணைக் கமிஷன் அறிக்கையில், ஆகஸ்ட் 5ம் தேதி வரை மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கிய நிறுவனத்துக்கு பணம் அளிக்காமல் நிலுவை வைத்துள்ளது. பணம் செலுத்தாமல் தாமதப்படுத்தியதற்கு நிர்வாகத்திலுள்ள குறைந்தபட்சம் 6 பேர் பொறுப்பாவார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு பணம் செலுத்தவில்லை என்று நினைவூட்டியும் அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை தலைவர் மருத்துவர் சதீஷ், தலைமை மருந்தியல் நிபுணர் கஜனன் அகர்வால் ஆகியோர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது. மருத்துவர் கஃபீல் கான் போன்றவர்கள் செய்த புகார்களில் கவனம் செலுத்தி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை கமிஷன் அறிக்கையில், மருத்துவமனையின் நிதி செலவிடும் முறை பற்றி ஒரு முழுமையான விசாரனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், தலைமை மருத்துவ அதிகாரி, மாவட்ட துணை நீதிபதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் இயக்குநர் உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதனிடையே, குழந்தைகளின் உயிரிழப்பு பிரச்னையில் நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கிவந்த நிறுவனத்துக்கு ரூ.20.84 லட்சத்தை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *