பாரத்மாலா திட்டம் இந்தியாவின் லாஜிஸ்டிக் செலவுகளைத் தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்குமென்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய சாலை போக்குவரத்துத்துறையை மேம்படுத்த மத்திய அரசு ’பாரத்மாலா’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பாரத்மாலா திட்டத்தில் கடற்கரைச் சாலைகள், எக்ஸ்பிரஸ்வே என சுமார் 51,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலையமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 29,000 கிலோமீட்டர் அளவிலான சாலையமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “பாரத்மாலா திட்டத்தின் அடிப்படையில் சாலைகளைக் கட்டமைத்துவிட்டால் வாகனப் போக்குவரத்தின் வேகம் 20 முதல் 25 சதவிகிதம் அதிகரித்துவிடும். இதன்மூலம் லாஜிஸ்டிக் செலவுகள் குறையும். தற்போது லாஜிஸ்டிக் செலவுகள் 18 சதவிகிதமாக உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு லாஜிஸ்டிக் செலவுகள் 6 சதவிகிதமாகக் குறையும் என்றார்.
மத்திய அரசு சாலை கட்டுமானப் பணிகளுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.6.92 லட்சம் கோடி செலவிடவுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதுமுள்ள 83,677 கிலோமீட்டர் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் பாரத்மாலா திட்டத்தில் முதற்கட்டமாக 34,800 கிலோமீட்டர் அளவிலான சாலைகளை அமைக்க ரூ.5.35 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,”