{
குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர், சென்னையைச் சேர்ந்த 24 பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழுவினர் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கொழுக்கு மலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றனர். கடந்த மார்ச் 11ஆம் தேதி கொழுக்கு மலையிலிருந்து மீண்டும் குரங்கணிக்கு அவர்கள் திரும்பியபோது, எதிர்பாராத விதமாகக் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை, தேனி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
மார்ச் 13ஆம் தேதி, திவ்யா விஸ்வநாதன் என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், சென்னையைச் சேர்ந்த அனுவித்யா, திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா, சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி, ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயஸ்ரீ, தஞ்சையைச் சேர்ந்த சாய் வசுமதி, சென்னையைச் சேர்ந்த நிவ்யா பிரக்ருதி, சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பார்கவி உட்பட கடந்த மார்ச் 26ஆம் தேதிவரை 21 பேர் உயிரிழந்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி (26) என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை(ஏப்ரல் 3) உயிரிழந்தார். இதனால் குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.�,