குட்கா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 6 பேரையும் வரும் 28 ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி திருநீல பிரசாத் முன்னிலையில் இன்று (நவம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற காவல் முடிந்து 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் நவம்பர் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2வது முறையாக ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,