நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனத்தில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனத்தின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகலவிதமான தோஷங்களையும் நீக்கும். எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபட வேண்டும் என்கிறார்கள் புண்ணிய புருஷர்கள். அம்பிகைக்கு நைவேத்தியம் செய்யும் இந்த சிவப்பு ராஜ்மா சுண்டல், அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் சுண்டலாகும்.
**தேவையானவை**
சிவப்பு ராஜ்மா – ஒரு கப்
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**வறுத்துப் பொடிக்க:**
காய்ந்த மிளகாய் – 3
தனியா – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
**எப்படிச் செய்வது?**
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து… வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் செய்து வைத்துள்ள பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: வெள்ளை மொச்சை சுண்டல்](https://minnambalam.com/k/2019/09/28/1)�,