qகிச்சன் கீர்த்தனா: சாமை வெஜிடபிள் கிச்சடி

Published On:

| By Balaji

30 ஆண்டுகளுக்கு முன் ஏழைகளின் உணவு என்று பெயரிடப்பட்ட சிறுதானியங்கள்தான் இன்று உயர் ரக உணவாக மாறியிருக்கிறது. வெறுமனே அரிசியை சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை. தினம் ஒரு சிறுதானிய உணவை நம் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி காய்கறிகள் பழங்களுடன் சேர்த்து சரிவிகித உணவாக சேர்த்து சாப்பிடுவது அவசியம். சிறுதானியங்களில் தசைகளுக்கு வலுவளிக்கும் தன்மை சாமைக்கு அதிகம் உண்டு. அப்படிப்பட்ட சாமையைக்கொண்டு சாமை வெஜிடபிள் கிச்சடி செய்து குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமையுங்கள்.

என்ன தேவை?

உமி நீக்கி சுத்தம் செய்த சாமை – ஒரு கப்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து – ஒரு கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 3

பெரிய தக்காளி – ஒன்று

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

சாமையைக் கழுவி தனியே வைக்கவும். சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வரகைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பைத் தணித்து வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் தூவி பரிமாறவும். இதற்குத் தொட்டுக்கொள்ள புதினா சட்னி நன்றாக இருக்கும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share