காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் இருவரது உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) மதியம் 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர்.
நேற்று (பிப்ரவரி 15) காஷ்மீர் பட்காம் நகரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். நேற்றிரவு இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அந்தந்த மாநிலங்களுக்கு வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வீரர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் தமிழக வீரர்களின் உடல்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் மற்றும் திமுக, அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.
தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரியலூருக்கும், துணை முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி சவலாப்பேரிக்கும் செல்கின்றனர்.
**விசாரணை**
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் ஏறக்குறைய 150 கிலோ சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதாக, தேசிய பாதுகாப்புப் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பற்றித் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த அன்று, ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையில் பொதுமக்கள் வாகனங்கள் செல்வதற்காகத் தனியாகப் பாதைகள் விடப்பட்டிருந்தன. இதனால் சிஆர்பிஎஃப் பேருந்துகள் செல்வதிலும், சாதாரண மக்கள் செல்வதிலும் இடையூறு இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து வரும் சாலைகள் பிரதான நெடுஞ்சாலையில் இணைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.
மாலை 3.30 மணியளவில் காக்காபோரா, லேல்கர் இணைப்புச் சாலையில் இருந்து வேகமாக வந்த எஸ்வியு ரக ஸ்கார்பியோ கார், சிஆர்பிஎஃப் வீரர்கள் பேருந்து சென்ற வரிசையில் 5ஆவது பேருந்து மீது இடது புறம் மீது பலமாக மோதியது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வான்வழியாக வீரர்களைக் கொண்டுசெல்ல வசதி இல்லாததால், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்ல வீரர்கள் சாலை மார்க்கத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிக எண்ணிக்கையில் வீரர்கள் செல்வதால் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டது. வாகனத்தில் வெடிபொருளை நிரப்பிவந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
**பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு**
பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை ரிச்சி தெருவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தாக்குதலைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடைகளை அடைத்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள்.
**இலவச சிகிச்சை**
காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, “உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்களுக்கு அப்போலோவின் எல்லா மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறினார்.�,”