கால நிலை மாற்றத்திற்கான உலக இணைய மாநாடு இன்று (நவ-22) மார்சல் தீவுகளில் நடைபெறுகிறது என்று அந்நாட்டின் அதிபர் ஹில்டா ஹெய்ன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கால நிலை மாற்றத்தினால் பூமி சூடாகி வருவது மனித குலத்தை அச்சுறுவதாக மாறியுள்ளது. அதிக மழைப்பொழிவும் அதிகமான வறட்சியும் உலகம் முழுவதும் பல நாடுகளில் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த இதுவரை ஐநாவின் தலைமையில் பல உலக மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக நடந்த பாரீஸ் உலக மாநாட்டில் காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தினால் அதிகமான பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து வரும் நீரானது கடலில் கலந்து வருகிறது. இதன் விளைவாக கடல் மட்டமானது உயர்ந்து வருகிறது. இதில் பாதிக்கப்படப்போகும் நாடுகளில் முதன்மையாக இருப்பது உலகம் முழுவதும் உள்ள தீவு நாடுகளாகும். ஏற்கனவே ஐஸ்லேண்ட் தீவுகள், மார்சல் தீவுகள் உள்ளிட்ட பல தீவு நாடுகள் பாதிக்கப்பட உள்ளன. நம் நாட்டைப் பொருத்தவரை சுந்தரவதனக்காடுகள் மூழ்கிடும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள மார்சல் தீவுகள் நாடு காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த உலகநாடுகள் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உலக இணைய மாநாட்டை இன்று நடத்துகிறது.
இணைய தளத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரூன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐநாவின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்
இன்று முழுவதும் நடைபெறும் உலக இணைய மாநாட்டில் அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் உரையாற்றிய பின்னர் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐநாவின் உலக காலநிலை மாற்ற மாநாடு வரும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று போலந்திலுள்ள காட்டோவிஸில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.�,