தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ளும் பயணத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 31) தொடங்கி வைத்தார்.
நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார் வைகோ. மதுரை பழங்காநத்தத்திலிருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
துவக்க விழாவில் பேசிய திருமாவளவன், ‘’1986 காலகட்டத்தில் நான் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது வைகோவிடம் எத்தகைய வீரியத்தைக் கண்டு பார்த்து பிரம்மித்தேனோ, அதே வீரியத்தை இப்போதும் அவரிடம் பார்த்து வியக்கிறேன். ஒரு லிட்டர் டீசல் போட்டால் சில வண்டிகள் 3 கிலோ மீட்டர்தான் ஓடும், சில வண்டிகள் 8 கிலோ மீட்டர் போகும். அப்படிப்ட்ட பவர்ஃபுல் என்ஜின் கொண்ட ஆற்றல் வாய்ந்த போராளிதான் வைகோ’’ என்றார்.
பண்டைத் தமிழரின் சின்னங்களான வில், மீன், புலி சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியை அசைத்துப் பயணத்தைத் துவக்கிவைத்த ஸ்டாலின் பேசுகையில் வைகோவை வெகுவாகப் புகழ்ந்தார்.
“நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைகோ 10 நாள் பயணமாக விழிப்புணர்வுப் பேரணியை இன்று தொடங்கி உள்ளார். இதில் பங்கேற்றுப் பேரணியை தொடங்கிவைப்பதில் பெருமையடைகிறேன். வைகோ நடத்தவுள்ள இந்தப் பேரணி எதிர்ப்புப் பேரணி அல்லாமல் விழிப்புணர்வுப் பேரணியாக அமையும்.
கடந்த 20 ஆண்டு காலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக வைகோ தொடர்ந்து போராடிவருகிறார். மக்கள் மன்றமானாலும், நாடாளுமன்றமானாலும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சுற்றுச்சுழலைப் பாதுகாக்க வைகோ குரல் கொடுத்துவருவது தெரியும்.
இன்று தொடங்கியுள்ள இந்தப் பேரணி தன்னெழுச்சிப் பேரணியாக உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல் தானே ஆஜராகி வாதிட்டவர் வைகோ. தற்போது அவரே நியூட்ரினோவை எதிர்த்துப் பேரணியை தொடங்கி உள்ளார்.
கண்ணகி பாண்டிய நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு மதுரையிலிருந்துதான் புறப்பட்டார். அதே போல் தற்போது நீதி கேட்டு, நியாயம் கேட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரையிலிருந்து வைகோ பயணத்தைத் தொடங்கியுள்ளார்’’ என்று வைகோவைக் கண்ணகியோடு ஒப்பிட்ட ஸ்டாலின், பிரதமர் மோடியைக் கடுமையாக சாடினார்.
”இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சி மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. நியூட்ரினோ திட்டம் அமைந்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். ஆனால் இதைப் பற்றியும் மோடி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக சுடுகாடாக மாற்றத் திட்டமிட்டு மோடி செயல்பட்டுவருகிறார். அதற்காகத் தமிழகத்திற்குப் பல்வேறு அழிவு திட்டங்களைக் கொண்டுவருகிறார். வைகோ தொடங்கியுள்ள இந்த பேரணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்றார் ஸ்டாலின்.
இன்று மதுரையில் தொடங்கும் நியூட்ரினோ எதிர்ப்புப் பயணத்தைப் பத்து நாட்களில் கம்பத்தில் நிறைவுசெய்கிறார் வைகோ.�,