நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களைப் போல், உறவினர்களைப் போல் சூழலும் நமது குணநலன்களை, ஆளுமையை, நாம் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
உலகில் பிறந்த ஜீவராசிகளில் ஒவ்வொன்றின் வாழ்வுக்கும் மற்றொன்று காரணமாக இருக்கிறது. ஆனால் அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.
மொபைல், கணினிகளை அணைத்துவிட்டு மெல்ல இயற்கையை நோக்கி, செல்லப் பிராணிகளை நோக்கி பெருவாரியான இளைஞர் கூட்டம் திரும்புகிறது. இயற்கை விவசாயம் பற்றி ஆழமாக அறிந்துகொள்கிறது. தொடு திரையை தடவிக்கொண்டிருக்கும் தலைமுறையிலிருந்து ஒரு சாரார் இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். ஆனால் இவை மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை.
நம் வழிப்படுகிற நம்மோடு உறவாடுகிற மனிதர்கள், ஜீவராசிகளைப் பற்றி அறிந்துகொள்கிறோம். அவர்களின் இருப்பை உணர்கிறோம். இவை நம் வாழ்விற்கு உதவுகின்றன. செல்ல நாய், வளர்ப்பு பூனைகளின் நடவடிக்கைகளை கவனிக்கிறோம். குணநலன்களை பார்த்து அறிகிறோம். தெரிந்தோ தெரியாமலோ இவை நம் நடவடிக்கையில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.
அதைப் போலவே அடிக்கின்ற வெயிலும், மழையும், காற்றும், குளிரும் நம்மோடு பேசியபடியே தான் உள்ளன. நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அவை நமக்குள் புரிகின்ற தாக்கங்கள் ஏராளம். நண்பனைப் போல் ஆறுதலும் சொல்லும், எதிரியைப் போல் பகைமையையும் கக்கும்.
அகிரா குரோசவா இயக்கத்தில் உருவான ரஷோமான் திரைப்படத்தில் ஒரு காட்சி. வெயிலின் கிறக்கத்தில் ஒரு மரத்தின் அடியில் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிஃபுனே படுத்திருப்பார். குதிரையில் கணவனோடு ஒரு பெண் காட்டில் செல்வதை பார்ப்பார். அப்போது சட்டென குளிர்ந்த காற்று ஒன்று வீசும். அவர் முகம் பிரகாசிக்கும். அதன் பின் தான் படத்தின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். கொடூரமான அந்த சம்பவங்கள் நிகழ்ந்த பின் மிஃபுனே வாக்குமூலம் அளிக்கும் போது, “அன்றைக்கு மட்டும் அந்த நேரத்தில் குளிர்ந்த காற்று வீசாமல் இருந்திருந்தால் அவன் இறந்திருக்க மாட்டான்” என்று கூறுவார்.
வாழ்க்கையின் பாதை மாற இயற்கையின் சிறு சிறகு அசைவு கூட போதுமானது. நாம் நினைத்துப் பார்க்கமுடியாத பிரம்மாண்டமும், ஆற்றலும் இயற்கைக்கு உண்டு. அது மனித குலத்தின் ‘நான்’ என்ற அகந்தையை லேசாக ஊதித் தள்ளிவிட்டு நகர்ந்துவிடும். அதை உணர்ந்த மனிதன் இயற்கையை அளிக்க கோடரியை தூக்கிக் கொண்டு இறங்கமட்டான்.�,