நமக்குள் தேடுவோம் 14 – ஆசிஃபா
தினமும் காலையில் 5:30 மணிக்கு எழுந்து, டீ போட்டுவிட்டு அப்பா அம்மாவை எழுப்பி, குளித்துக் கிளம்புவதற்குள் சாப்பாடு தயாராக இருக்கும். சாப்பிட்டுவிட்டு 6:40 மணிவாக்கில் சாலைக்குச் சென்றால், 6:55 மணிக்குப் பேருந்து வரும். அதில் ஏறிப் பள்ளிக்குச் சென்றுவிட்டு, 1 மணிக்குப் பேருந்து ஏறி வீட்டுக்கு 2:30 மணிக்கு வந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடிவிட்டு, 4 மணிவாக்கில் தொடங்கி 8 மணிவரை படிப்பு. பிறகு, சிறிது நேரம் டிவி, சாப்பாடு, பேச்சு… இரவு 12 மணி ஆகிவிடும் உறங்குவதற்கு. மீண்டும் அதே வரிசையில்தான் அடுத்த நாளும் இருக்கும். வாரம் ஒரு நாள் விடுமுறையன்று எழுவதற்கே பகல் 12 மணி ஆகிவிடும். பிறகு பொறுமையாக அனைத்து வேலையையும் செய்வதற்குள் இரவாகிவிடும்.
என்னுடைய 15 வயது வரையிலான வாழ்க்கையின் routine இதுதான். அனைத்தும் ஒரு வரையறைக்குட்பட்டு, முன் தீர்மானங்களுக்குட்பட்டுதான் நடக்கும். அதில் ஒருவிதமான நிம்மதியும் தெளிவும் இருந்ததாகத் தோன்றும். ஆனால், அதே வழக்கம் சில நேரத்தில் ரோபோட்டாக இருந்துவிட்டோமோ என்றுகூடத் தோன்றும். ஆனால், கல்லூரி முதல் இப்போதுவரை, ஒரு குறிப்பிட்ட வழக்கத்துக்குள் நாட்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை. இதில், இரு நிலைகளைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன். ஒன்று புரிந்தது.
முதலில், rigid schedule என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், தெளிவாக முன்னால் தீர்மானிக்கப்பட்ட வேலைகளை, அந்தக் கால அவகாசத்துக்குள் செய்வது நல்லது. அது நமக்கு ஓரளவுக்குத் தெளிவையும் முடிவெடுக்கும் தன்மையையும் தருகிறது.
ஒவ்வொரு தினத்திலும் வேலைகளைச் சரியாகச் செய்யும்போது ஒருவிதமான நிறைவு கிடைக்கிறது. அது நம் நாளை அர்த்தப்படுத்துகிறது. இதுதான் முக்கியம். காரணம், ஒன்றுமே செய்யாமல் ஒரு நாளைக் கழிக்கும்போது, தேவையற்ற சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. இப்படியிருக்க, நாம் என்ன செய்தோம் என்று யோசிக்கும்போது, இவ்வளவு செய்திருக்கிறோம் என்று பார்த்துக்கொள்வது, நம் வேலையின் மீதான நம்பிக்கையையும் பிடிப்பையும் அதிகப்படுத்துகிறது.
இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. இப்படி வழக்கத்திலிருந்து சற்றும் விலகாமல் நடந்துகொள்ளும் நபர்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை, ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேரம், நாம் போட்டுவைத்த திட்டத்தின்படி வேலை நடக்கவில்லை என்றால், சட்டென்று நம் ஆற்றல் குறைந்ததைப் போல உணர்வோம். நாம் நினைத்ததைப் போல, தீர்மானித்ததைப் போல எப்போதுமே வேலை நடக்கும் என்று சொல்ல முடியாது இல்லையா? அப்படியான சூழலை எப்படிக் கையாள்வது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
Schedule என்று சொன்னால், தினமும் ஒரே வேலை என்றுதான் அர்த்தம். ஆனால், அந்த ஷெட்யூலிலிருந்து அவ்வப்போது விலகிக்கொள்வதும் அவசியம். ஓய்வு அல்லது மாறுதல் நமக்கு மிகவும் அவசியம். அது மட்டுமில்லாமல், ஷெட்யூலில் ஒரு விரிசல் ஏற்பட்டாலும், மீண்டும் அதைச் சீர்செய்துகொள்ளும் தன்மையை இது ஏற்படுத்துகிறது.
என் பள்ளிக்காலத் தோழி ஒருத்திக்கு எல்லாமே கன கச்சிதமாக நடக்க வேண்டும். 8 மணி என்றால் பேருந்தில் இருக்க வேண்டும்; 9 மணி என்றால் நூலகத்தில்; 9:15 என்றால் வகுப்பில் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பாள். இதில் ஒரு சிறு பிசகு ஏற்பட்டாலும், அவளின் அன்றைய நாளில் குறை என்று புலம்புவாள். நான் இதற்கு நேரெதிராக இருந்தேன். எனக்கு இதனால் ஏற்பட்ட நன்மை, பிடித்ததைச் செய்ய முடிந்தது; பிரச்சினை, நாம் என்ன செய்கிறோம் என்பதில் ஒரு புரிதல் இல்லாமல் இருந்தேன்.
இப்படிப் பல கோணங்களிலும் பார்க்கும்போது சில முக்கியமான விஷயங்கள் புலனாகின்றன:
1. குறிப்பிட்ட வேலையைத் தினமும் செய்வதில்தான் வாழ்க்கையின் பெரும்பங்கு கழியப்போகிறது. அது என்ன வேலை என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
2. ஒரு ஷெட்யூலில் வேலை செய்யப் பிடிக்கவில்லை/முடியவில்லை என்றால், ஒரே நாளில் அப்பழக்கத்தைக் கொண்டுவர முடியாது. முதலில், ஒரு வேலையைத் தினமும் செய்ய வேண்டும் என்று தொடங்கி, பிறகு ஒரே நேரத்தில் தினமும் அவ்வேலையைச் செய்வது என்று கொண்டுவரலாம்.
3. நாம் நினைத்ததுபோல வேலை நடக்கவில்லை என்றால், ரொம்பவும் அலட்டிக்கொள்ளக் கூடாது. ஷெட்யூல் நமக்காகத்தானே தவிர, நாம் அதற்காகக் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.
4. செய்தே ஆக வேண்டிய ஒரு வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றால், பிரேக் எடுப்பதில் தவறில்லை. அதிலேயே எரிச்சலுடன் வேலை செய்வது மேலும் நமது மனநிலையை மேலும் மோசமாக்குகிறது.
5. எந்த அளவுக்கு ஷெட்யூலை ஏற்றுக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு ஒன்றுமே செய்யாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதையும் அவ்வப்போது நம் ஷெட்யூலில் இணைத்துக்கொள்வது நலம்!
[நடுவில் நிற்கக் கற்றுக்கொள்வோம்!](https://minnambalam.com/k/2019/06/11/27)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”