qஉலகக் கோப்பை: சொதப்பும் தென்னாப்பிரிக்கா!

Published On:

| By Balaji

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் 25ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 19) தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக இப்போட்டி 49 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது. தொடக்க வீரராகக் களமிறங்கிய குயிண்டன் டீகாக் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹசிம் ஆம்லா அரைசதம் அடித்த கையோடு வெளியேறினார். ஃபாஃப் டூபிளசிஸ் 23 ரன்களுக்கும், எய்டன் மார்க்ரம் 38 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஐந்தாவது வீரராகக் களமிறங்கி கடைசி வரை போராடிய வாண்டர் டுசன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தாங்கள் சந்தித்த பந்துகளை விடக் குறைவான ரன்களையே எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணியால் 49 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறப்பாகப் பந்துவீசிய லாக்கி ஃபெர்குசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிதான இலக்கை நோக்கிக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கோலின் மன்ரோவும், மார்ட்டின் கப்திலும் நல்ல தொடக்கம் தரவில்லை. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த கோலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி தொடக்கத்தில் வழங்கிய கேட்ச் வாய்ப்புகளை தென்னாப்பிரிக்க வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பல முறை கண்டத்திலிருந்து தப்பிய கேன் வில்லியம்சன் சதமடித்து அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். டி கிராண்ட் ஹோம் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி சிறப்பாகப் பந்துவீசியும் மோசமான ஃபீல்டிங் காரணமாக அந்த அணி தோல்வியைத் தழுவியது. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் மோசமான பயணம் தொடர்கிறது. நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்ட அணிக்குக் குறைந்தது 300 ரன்களையாவது வெற்றி இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றிபெற இயலும். பேட்ஸ்மேன்களின் மந்தமான ஆட்டமும், ஃபீல்டர்களின் மந்தமான ஃபீல்டிங்கும்தான் அந்த அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/19/82)**

**[எடப்பாடி – வேலுமணி இடையே விழுந்த விரிசல்!](https://minnambalam.com/k/2019/06/19/32)**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

**[தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?](https://minnambalam.com/k/2019/06/19/31)**

**[பிரேமலதா சமரசம் தோல்வி!](https://minnambalam.com/k/2019/06/19/19)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment