Qஇளைய நிலா: இந்த ஒப்பீடு தேவையா?

Published On:

| By Balaji

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 34

ஆசிஃபா

Peer pressure என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமானதுதான் இல்லையா? சிறு வயதிலிருந்தே இதை வீடுகளில் சொல்வார்கள். பொய் சொல்கிறோமா? நண்பர்கள்தான் காரணம். வேறொருவர் பொருளை எடுத்து வந்தோமா (திருடுதல் என்பது சிறு வயதில் நமக்குத் தெரியாது)? நண்பர்கள் காரணம். எதிர்த்துப் பேசினோமா? நண்பர்கள்தான் காரணம். இப்படி அன்று முதல் இன்று வரை நாம் என்ன செய்தாலும், நண்பர்களின் அழுத்தமே காரணம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அனைவரது வீட்டிலும் இதே கதைதான். நம் நண்பர்கள் வீட்டிலும்கூட!

இது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில், நண்பர்கள், அதாவது நம் வயதை ஒத்தவர்கள் நமக்குக் கொடுக்கும் அழுத்தம் என்னென்ன? அவை நம்மை எப்படி பாதிக்கின்றன? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், பல நேரங்களில் தற்செயலாக அவர்கள் செய்வதுகூட நமக்கு அழுத்தமாகவே வந்து சேர்கிறது. இதற்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்கலாம். ஆம், அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. மாற வேண்டியது நாம்தான்.

கடந்த வாரம் என் வகுப்புத் தோழிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது; நான் கல்லூரி சேரும்போது, இன்னொரு தோழிக்குத் திருமணம் நடந்தது; என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் நல்ல ஒரு நிறுவனத்தில், நன்றாகச் சம்பாதித்து இப்போது உலகச் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறான்; இன்னொருவன் மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறான்; எனக்கு மிக மிக நெருக்கமான தோழி ஒருத்தியிடம் இப்போது என்னால் பேசவே முடியவில்லை, காரணம், அவள் எப்போது பேசினாலும் bungee jumping பற்றியும், நயாகரா அருவிக்குச் செல்வது பற்றியும் மட்டுமே பேசுகிறாள்.

இது எல்லாம் நல்லதுதான். நண்பர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், அது என்னிடத்தில் ஏற்படுத்தும் அழுத்தம்? அதைப் பற்றி யாரிடமும் பேசவும் முடியாது. அப்படிச் செய்தால், *பொறாமை* என்று மிக எளிதாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், இது பொறாமை இல்லை. நிதர்சனம். நம் நண்பர்கள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கம்தான் மிகவும் அதிகமானது. அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் பிரச்சனை கிடையாது. ஆனால், இருக்கும் மன அழுத்தத்தை அதிகமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

நேரடியாக சென்று நண்பர்களிடம் பேச முடியாது. “நீ இப்படிப் பேசுவது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று சொல்வது சாத்தியமே இல்லை. அதனால் நாம் அவர்களை விட்டு விலகிச் செல்கிறோம். இப்படியே அனைவரிடமிருந்தும் விலகிக்கொண்டே இருக்க முடியுமா? இதை எப்படிச் சமாளிப்பது?

“வாழ்க்கை இப்படித்தான். புரிஞ்சுக்கோங்க” என்று எளிதாக அட்வைஸ் செய்துவிடலாம். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. எனவே, கொஞ்சம் பிராக்டிக்கலாகப் பேசலாம்.

முதலில், நம் வாழ்க்கை வேறு, அவர்கள் வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சொல்லிக்கொண்டே இருப்பது அல்ல முக்கியம், மனதளவில் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது, ஒப்பீடு செய்து பார்க்கத் தேவையில்லை. ஒப்பீடு செய்யும் அளவிற்கு எந்த இருவருக்குள்ளும், வயது, பாலினம் தாண்டி எந்த ஒரு ஒற்றுமையும் இருப்பதில்லை. மூன்றாவது, நாம் ஒன்றுமே செய்யாமல் இருந்ததே இல்லை; இருப்பதும் இல்லை. ஏதோ ஒன்றைச் செய்கிறோம்; ஏதோ ஒன்றைப் படிக்கிறோம்; எங்கோ வேலை செய்கிறோம். இது எதுவுமே இல்லையா, என்ன செய்யலாம் என்பதை யோசித்துக்கொண்டாவது இருப்போம். எனவே, ‘வெட்டியாக’ யாருமே இருப்பது இல்லை.

கடைசியாக, திருமணம், உலகப் பயணம், நல்ல வேலை, நிறைய பணம் எல்லாமும் தனிநபர் விருப்பங்கள் சார்ந்தவை. நமக்கு எது தேவையோ, நம் வாழ்க்கைப் பயணம் எதை நோக்கியதோ, அதை மையப்படுத்தியே நாம் செயல்பட வேண்டுமே தவிர, நம்முடன் இருப்பவர்கள் செய்வதை எல்லாம் பார்த்து, அதே போல இருக்க வேண்டும் என்றோ, அப்படி இருக்க முடியவில்லையே என்றோ நினைக்க வேண்டிய அவசியமில்லை.

[ஓவராக யோசிக்க வேண்டாமே!](https://minnambalam.com/k/2019/03/28/40)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share