21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 9) காலை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலுடன், 21 சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வலியுறுத்தி வருகிறது. அதன்படி இரு தேர்தல்களுக்கும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு 09-03-2019, 10-03-2019 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதல் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். அந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களிடம், தொகுதி குறித்த முழு விவரங்கள் அவர்களுக்கு தெரியுமா?, தொகுதியில் உள்ள பிரச்சினைகள் என்ன? எந்தெந்தப் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்? வாக்குச் சேகரிப்பு யுக்திகள், உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது.
முன்னதாக 21 தொகுதிகளில் போட்டியிட கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்தவகையில் திமுக சார்பில் 250 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதற்காக 1000 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்து, உங்களில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். யாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் அனைவரும் தேர்தலில் கடுமையாகப் பணியாற்றிட வேண்டும் என்று சொல்வதற்கும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.�,