பிடிவாரண்ட் உத்தரவைச் செயல்படுத்தாத காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூடுதல் காவல் ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்படி, அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று, சென்னை பூக்கடை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று (அக்டோபர் 30) நீதிபதி டீக்காராமன் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பூக்கடை காவல் ஆய்வாளர் நேரில் ஆஜரானார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி. குற்றம்சாட்டப்பட்டவரை நேரில் சந்தித்து ஆஜராக அறிவுறுத்தியும், அவர் ஆஜராகவில்லை எனத் தெரிவித்தார் காவல் ஆய்வாளர் ரவி.
இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, காவல் ஆய்வாளர் ரவிக்குக் கண்டனம் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் ரவி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கூடுதல் காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி டீக்காராமன். இந்த வழக்கு விசாரணை, வரும் நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.�,