qஆதிச்சநல்லூர்: கார்பன் சோதனைக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

கார்பன் பரிசோதனைக்காக, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருட்களை புளோரிடா, டெல்லிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2005ஆம் ஆண்டு வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பின், இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று (பிப்ரவரி 18) நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கையை இன்னும் ஏன் தாக்கல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அகழாய்வின்போது கிடைத்த பொருட்களின் காலத்தைக் கண்டறியும் கார்பன் பரிசோதனைக்காக, வரும் 22ஆம் தேதிக்குள் அவற்றை புளோரிடா, டெல்லிக்கு அனுப்ப வேண்டுமென்று உத்தரவிட்டது. அகழாய்வுப் பொருட்களை அனுப்பியதற்கான ஆவணத்தை பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பணியாற்றிய சத்தியமூர்த்தி, சத்தியபாமா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென்றும், அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து வரும் 25ஆம் தேதியன்று நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share