uநடுவரின் தவறான தீர்ப்பு: குமுறும் மேரி கோம்

Published On:

| By Balaji

ரஷ்யாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து, நடுவரின் முடிவை ஏற்காத மேரி கோம், மேல்முறையீடு செய்தது சர்ச்சையானது.

11ஆவது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் கலந்து கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று(அக்டோபர் 12) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், 23 வயதான துருக்கி வீராங்கனை புசேனாஸ் காகிரோக்லுவிடம் மோதினார் 36 வயதான இந்திய வீராங்கனை மேரி கோம். 5 சுற்றுகளின் முடிவில் மேரி கோம் 1-4 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனை புசேனாஸிடம் தோல்வி அடைந்தார். 6 முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், முதல் முறையாக வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

**நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு**

முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரி கோம், ‘அட்டாக்’, ‘டிஃபன்ஸ்’ என இரண்டையும் கலந்து சாதுர்யமாக ஆடினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் மேரி கோம், துருக்கி வீராங்கனை புசேனாஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்டத்தின் போது, புசேனாஸின் முகத்தில் மேரி கோம் தாக்கியதற்கு நடுவர் புள்ளியை அளிக்கவில்லை. இதனால் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார் மேரி கோம். அடுத்தடுத்து வந்த சுற்றுகளிலும் மேரி கோமுக்கு ஈடுகொடுத்து மோதி துருக்கி வீராங்கனை கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பதிலடியாக மேரி கோம் சில ‘பஞ்ச்கள்’ கொடுத்தபோதிலும் நடுவர் அவருக்குப் புள்ளிகள் வழங்கவில்லை.

இதனால் 4-1 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வி அடைந்ததாக நடுவர் அறிவித்தார். நடுவரின் முடிவை ஏற்காத மேரி கோம், மேல் முறையீடு செய்தார். இந்தியக் குழுவும் நடுவர் தீர்ப்புக்கான மறு ஆய்வைக் கோரியது. ஆனால், மேல் முறையீட்டை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) தொழில்நுட்பக் குழு நிராகரித்தது. விதிகளின்படி, 3-2 அல்லது 3-1 என்ற கணக்கில் இருந்தால் மட்டுமே ஒரு ஆட்டத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு கேட்க முடியும் என அக்குழு கூறியது.

இழப்பினால் தனது வேதனையை வெளிப்படுத்திய மேரி கோம், தனது டிவிட்டர் பக்கத்தில் ஆட்டத்தின் முடிவை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார். மேரி கோம்,“எப்படி? ஏன்? முடிவு எவ்வளவு சரியானது மற்றும் தவறானது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள்” என பதிவிட்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு ஆகிய இருவரது டிவிட்டர் கணக்கையும் இந்த ட்வீட்டில் ‘டேக்’ செய்து அவர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்டுள்ளார் மேரி கோம்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share