உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்குச் சென்னை வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் இன்று (அக்டோபர் 10) பாராட்டு விழா நடத்தப்பட்டது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக வீராங்கனை பி.வி.சிந்து இன்று சென்னை வந்தார். அவருக்கு வேலம்மாள் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரகம், பொய்க்கால் குதிரை, மயில் வேடம் எனப் பல வேடமிட்டிருந்த மாணவர்கள் அணி வகுப்பாகச் சென்று பி.வி.சிந்துவை வரவேற்றனர். சாலையிலிருந்து பள்ளி கேட் வரை காரில் வந்த பி.வி.சிந்து அங்கிருந்து, அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது வருகையை ஒட்டி பள்ளி வளாகத்தில் அவர் விளையாடும்
மற்றும் பதக்கம் பெற்ற புகைப்படங்கள் போஸ்டர்களாக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பி.வி.சிந்துவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றுப் பேசினர். தொடர்ந்து, சர்வதேச அளவில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஊக்கத்தொகையைச் சிந்து வழங்கி கவுரவித்தார்.
பின்னர் மாணவர்களின் கரகோசங்களுக்கு மத்தியில் பேசிய பி.வி.சிந்து, “சென்னை வந்து உங்களையெல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பேட்மிண்டன் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. 8 வயதில் விளையாடத் தொடங்கினேன். பேட்மிண்டனை தவிர வேறு எந்த விளையாட்டையும் நினைத்துப் பார்த்ததில்லை. பெரும்பாலானவர்கள் பேட்மிண்டன் மட்டும் விளையாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக என் வாழ்க்கையில் பல விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறேன். இதனால் தற்போது உங்கள் முன்னிலையில் உலக சாம்பியன்ஷிப்பாக நின்று கொண்டிருக்கிறேன்” என்றார். பின்னர், என்னுடைய ரோல் மாடல் எனது அப்பாதான் என்று தெரிவித்த பி.வி.சிந்து, கடின உழைப்பே வெற்றியைத் தேடித் தரும். படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும் என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டிலும், படிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் மேலும் மேலும் உயரத்துக்கு வர வேண்டும். உலக சாம்பியன்ஷிப்பில் வென்றது. அருமையான வெற்றிகளில் ஒன்றாகும். எதிர்பார்க்கப்பட்டதுதான். இவ்வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் பல எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. நாட்டு மக்களின் ஆசீர்வாதமாக நான் இதை எடுத்துக்கொள்கிறேன்.
”2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். என்னால் முயன்ற வரை சிறப்பாக விளையாடுவேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம். பெண்கள் தங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்து தைரியமாகப் பேச வேண்டும்” என்றார்.
”எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும், நாம் எந்த இடத்திலிருந்து வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதைத்தான் என் பெற்றோர் எனக்கு அறிவுரையாக சொல்வார்கள். இது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.
�,”