வரத்து அதிகரிப்பு: பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்!

public

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை மழை மிதமாக பெய்தது. நடப்பு மாதத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பதிவானது. இதைத் தொடர்ந்து ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

16 தொழிற்சாலைகளிலும் தினமும் நான்கு லட்சம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அதிகமாக தேயிலையைக் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வருகின்றனர்.

தேயிலை தொழிற்சாலைகள், கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பச்சை தேயிலையை சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால், தேயிலை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பால் தேயிலைத்தூள் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், “நீலகிரியில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தலா 30,000 கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும். தற்போது 45,000 கிலோ வரை கொள்முதல் அதிகரித்து இருக்கிறது. ஒரே நாளில் ஆறு லட்சம் கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும்.

இதனால் மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கொள்முதல் செய்து வைத்த தேயிலையை கொண்டு, தொழிலாளர்கள் சுழற்சி முறையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்து வருகின்றனர். வருகிற நாட்களில் தேயிலை தரமாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *