புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவி ஒருவர் தங்கப்பதக்கத்தைத் திருப்பி கொடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இந்தியா முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்று, புதுச்சேரி பல்கலை மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று பல்கலையில் 27ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு மாணவர்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து புதுச்சேரி சென்றார். முதலில், ’இச்சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் பட்டம் பெறமாட்டோம்’ என்று சில மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பின்னர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இன்றைய விழாவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களுக்கு கடும் கெடுபிடி விதித்தனர். ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு செல்போன் உள்ளிட்ட எதையும் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு தீவிர சோதனைக்கு பிறகே மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதன்படி உள்ளே சென்ற ரபிஹாவை அவர் தலையில் அணிந்திருந்த ஷாலை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதற்கு அந்த மாணவி அனுமதி மறுக்கவே தனியே அமரவைத்துள்ளனர். விழாவிலிருந்து குடியரசுத் தலைவர் கிளம்பியதும் ரபிஹா மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
உள்ளே சென்ற ரபிஹா, தனக்கு வழங்கிய தங்கப்பதக்கத்தை வாங்க, விழா மேடையிலேயே மறுத்துள்ளார். தங்கப்பதக்கம் அணிவிக்கும் போது அதைத் தடுத்த மாணவி, அதை அணிவிக்க வந்தவரிடம் சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாங்க மறுப்பதாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பட்டத்தை மட்டும் வாங்கிக்கொள்வதாகக் கூறி அதனைப் பெற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரபிஹாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ‘உண்மையான தங்க மகள்’, ’ரியல் சிங்கப் பெண்’ என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த இந்த மாணவி எம்.ஏ. மாஸ் கம்யூனிக்கேஷன் முடித்துள்ளார். ஏற்கனவே சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த இவர் முகநூலில் தனது ப்ரொஃபல் பிக்சரை “ ஐ அப்போஸ் சிஏஏ” என்று மாற்றியுள்ளார். அதுபோன்று தனக்கு வழங்கப்படும் தங்கப்பதக்கத்தையும் வாங்கப்போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன்படி இன்று தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை மறுத்திருக்கிறார் ரபிஹா.
இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புதுச்சேரி பல்கலையில் 2018ல் மாஸ் கம்யூனிகேஷன் முடித்துத் தங்கப்பதக்கம் வென்றிருந்தேன். சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான போலீசாரின் தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று தங்கப் பதக்கத்தை நிராகரித்தேன். எம்.ஏ பாஸ் பண்ணிருக்கேன். பாதுகாப்பு விதிமுறை மற்றும் அமைதியை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எதற்காக வெளியேற்றப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் தலையில் வேறு விதமாக முக்காடு அணிந்திருந்ததால் வெளியேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வெளியேற்றப்பட்டதற்கு அதுதான் காரணமா என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளால் விளக்கமும் அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
�,”