அ. குமரேசன்
ஊரில், நாட்டில், உலகத்தில் என்னென்னவோ நிகழ்கின்றன. கொரோனா கொண்டுவந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல நாடுகளிலும் பல்வேறு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டங்கள் அசைக்கப்படுகின்றன. கார்ப்பரேட் பிடிமானங்கள் கெட்டிப்படுத்தப்படுகின்றன. மக்களின் கையிருப்புப் பணம் உறிஞ்சப்படுகிறது. தந்தையும் மகனுமாய் காவல் தடிகளால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். சாதி ஆணவக் கொலைகாரர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுகிறார்கள். பழங்குடியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் சவக்குழி தோண்டக் கட்டாயப்படுத்தப்படுகிறார். புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை பெயர்ந்தவர்களாக்கப்படுகிறார்கள். கறுப்பினத்தவர் வெள்ளை முழங்காலால் நசுக்கப்படுகிறார். இத்தகைய நிகழ்வுகள் செய்திகளாகி வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் உரத்தக் குரலில் கண்டனங்களும் ஒலிக்கின்றன.
ஆனால், அந்தக் கண்டனக் குரல்களை விடவும் பல மடங்கு அடர்த்தியாக இருப்பது மௌனம். நெருக்கடியான காலத்திலும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரப்படும் சலுகைகள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கிற ஆணைகள் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் எல்லா மனிதர்களும் எதிர்வினையாற்ற மாட்டார்கள்தான். ஆனால் பெரும்பான்மையான மக்களிடமிருந்து எதிர்ப்பும் கண்டனமும் வெளிப்பட வேண்டாமா? பெரும்பான்மைச் சமுதாயம் மௌனமாக அல்லவா இருக்கிறது? அந்த மௌனம் ஆரோக்கியமற்றது, அநீதியானது, ஆபத்தானது.
கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிற இந்திய அரசமைப்பு சாசனச் சட்டத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பிரிவும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் 8 நிபந்தனைகளில் ஒன்று, ஒரு கருத்தை வெளிப்படுத்துவது பொது ஒழுங்குக்குக் குந்தகம் ஏற்படுத்துவதாக இருக்கலாகாது என்பது. அப்படிக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய கருத்தை தடுக்கலாம், அதை வெளிப்படுத்தியவரை முடக்கலாம். ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்திலேயே கூட இந்த விதிவிலக்கோடு கருத்துரிமையை உறுதிப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிவிலக்கு அரசாங்கங்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
**அன்சிவிலைஸ்டு அறிகுறி**
பொது ஒழுங்கு என்பதைப் பொது அமைதி என்றும் சொல்லலாம். அது சீர்குலைய விடக்கூடாதுதான். சிவில் சமூகம் என்கிறோமே, அது “சிவிலைஸ்டு” சமூகமாக இருப்பதற்கான அறிகுறிதான் பொது அமைதி. ஆனால், சிவில் சமூகம் “அன்சிவிலைஸ்டு” நிலையில் இருப்பதன் அறிகுறியே மௌனம். பொது அமைதி குலையாமல் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால் பொது மௌனம் கலையாமல் அது நிகழாது.
மௌனத்தால் ஏற்படும் அமைதி நம்பகமானதும் அல்ல, நிலையானதும் அல்ல. சத்தம் போடாமல் கப்சிப்பென்று இருப்பது ஒழுக்கமாகவே கூடப் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், குழந்தைகளே கூட அமைதியாக விளையாடுவது அழகு, கெடுபிடிக்கு அஞ்சி வாய்மூடியிருப்பது கொடுமை.
பொதுச் சமூகம் அதிகாரக் கெடுபிடிகளுக்கும் ஆதிக்க ஆணவங்களுக்கும் பணிந்து மௌனமாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. பணிந்துபோவதிலிருந்தும், பயந்துகிடப்பதிலிருந்தும்தான் “நமக்கெதற்கு வம்பு” என்றும், “நம்ம பொழப்பைப் பார்த்துக்குவோம்” என்றும் ஒதுங்குகிற எண்ணம் ஏற்படுகிறது. இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாகவே இந்த மௌனமும் ஒதுங்கலும் புகட்டப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
**எல்லோரும் போராடினார்களா?**
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிப் பேசுகிறவர்கள் பொதுவாக, மக்களின் பேரெழுச்சியால் தேசிய இயக்கம் வலுவடைந்தது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேற முடிவு செய்தார்கள் என்று சொல்வதைக் கேட்கிறோம். உண்மையிலேயே அன்று பல்வேறு ஆட்சிப் பகுதிகளாக இருந்த மாகாணங்களின் மக்கள் அனைவரும் போராட்டக் களம் புகுந்தார்கள் என்று சொல்ல முடியுமா? அனைவரும் இல்லையென்றாலும் ஆகப் பெரும்பான்மையோர் போராடக் கிளம்பினார்கள் என்று சொல்ல முடியுமா?
இதைக் கேட்டபோது மூத்த வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணாநந்தம் பல சான்றுகளோடு கூறிய பதிலின் சாரம்: “இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் தாங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளில் போராடினார்கள். விடுதலைப் போராட்டத்துடன் பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் காந்தி இணைத்தபோது இயக்கம் மேலும் பரவலாகியது, கூடுதலாக மக்கள் அதில் இணைந்தார்கள். ஆனாலும், குடிமக்கள் எல்லோரும் அல்லது மிகப் பெரும்பாலோர் இணைந்து போராடினார்கள் என்று சொல்வதற்கில்லை.”
“நம் நாட்டில் ஊறிப்போயிருக்கிற ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என்ற சமூக மனநிலை கூட இதற்கொரு காரணம்தான்,” என்றார் பேராசிரியர்.
**அச்சம், எச்சரிக்கை, கவனம்**
நிலப்பிரபுத்துவம் தனிக்கோலோச்சிய மன்னராட்சிக் காலங்களில் அரசியல் முடிவுகளில் குடிமக்களுக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை. மன்னர்களுக்கு இடையேயான திருமண உறவுகளின் பேரிலோ, மண்ணைக் கைப்பற்றும் சண்டைகளின் முடிவுகளிலோ ஆட்சிகள் மாறும். மிஞ்சிமிஞ்சிப் போனால் மன்னனின் எதிரி மக்களுக்கும் எதிரி என்ற கோட்பாட்டோடு, அந்தச் சண்டைக் களங்களுக்கு ஆண்கள் படைவீரர்களாக வேண்டுமானால் வரவழைக்கப்பட்டார்களேயன்றி, அந்தச் சண்டை தேவைதானா என்று கருத்துச் சொல்லியிருப்பார்களா? இந்த ஜனநாயகப் போராட்ட யுகத்தில் கூட பல நாடுகளின் அரசுகள் நடத்துகிற போர்கள் தேவையற்றவை என்று ராணுவத்தினர் மட்டுமல்லாமல் குடிமக்களே கூட சொல்லிவிட முடிகிறதா – தேசவிரோதக் குற்றச்சாட்டு பாயலாம் என்ற அச்சமில்லாமல்?
காலனியாதிக்கத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளில் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த ஆலய நுழைவு மறுப்பு, கல்வி தடுப்பு, அரசாங்க வேலைகள் மறிப்பு போன்ற பாகுபாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆணைகளால் ஓரளவுக்கு மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தன. அடித்தட்டுச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கூலித் தொழிலாளிகளாக வெளிநாடுகளுக்குச் செல்லவும், நாடுதிரும்பியபோது கொண்டுவந்த பணத்தில் நிலம் உள்ளிட்ட சொத்துகளை உடைமையாக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இத்தகைய பலன்கள் கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற உள்ளார்ந்த எச்சரிக்கையாலும்தான் அன்று பெரும்பாலோர் விடுதலைப் போராட்டக் களத்திற்கு வரவில்லையா?
தலைமுறைகளாகச் சலுகைகளை அனுபவித்துவந்த பிரிவுகளில், அரசியல் உணர்வு பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் ஏன் போராட வரவில்லை? ஒடுக்குமுறைகளால் கிடைத்த சுகங்களைத் தாங்களும் பங்குபோட்டுக் கொண்டதன் பின்னணியில் ஏற்பட்ட கவனமாக இருக்க வேண்டும் என்ற உணர்வாலா? வரலாற்று ஆய்வாளர்களும் சமூக அக்கறையாளர்களும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.
**பலன்களை மறுப்பார் யார்?**
களமிறங்கி வராதவர்கள் எல்லோருமே இப்படியான உள்ளார்ந்த எச்சரிக்கை உணர்வோடுதான் வர மறுக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. வழக்கு, நீதிமன்றம் என்று அலைய நேரிடுமோ என்ற மருட்சி ஒரு காரணியாக இருந்து அவர்களைத் தடுக்கிறது.
யாரோ சிலர் போராட, அந்தப் போராட்டம் வெற்றி பெறுகிறபோது, இதில் நான் பங்கேற்கவில்லை, ஆகவே இந்தப் பலன் எனக்கு வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லையே! எடுத்துக்காட்டாக தொழிலாளர்கள், விவசாயிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராட்டக் களத்திற்கு வருகிறார்கள் என்றால், கணிசமான தொழிலாளர்களும் விவசாயிகளும் ஊழியர்களும் ஆசிரியர்களும் வருவதில்லை. ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி சார்புகளால் மட்டுமல்ல, தண்டனை நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தால் மட்டுமல்ல, ஒன்றுபட்ட இயக்கங்களின் மீதான அக்கறையின்மையாலும் அவர்கள் வருவதில்லை.
ஆனால், போராட்டங்கள் வெற்றி பெற்று, கோரிக்கைகள் செயலாக்கம் பெறுகிறபோது இவர்கள் அதன் பலன்களை ஏற்க மறுப்பதில்லையே! போராட்டக் களம் புகுகிறவர்களும், பங்கேற்காதவர்களுக்குப் பலன்களில் பங்களிக்கக்கூடாது என்று தடுப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
**கண்ணையும் காதையும் மூடுவதால்**
ஆதாயங்களுக்கான போராட்டங்கள் மட்டுமில்லாமல் சமூக நீதி, பாலின சமத்துவம் போன்றவற்றுக்கான இயக்கங்களிலும் பலர் கலந்துகொள்வதில்லை. அமெரிக்காவைக் குலுக்கிக்கொண்டிருக்கும் ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணரல் கொலைக்கு எதிரான, கறுப்பர்கள் பொருட்படுத்தப்பட வேண்டியவர்களே என முழக்கமிடும் போராட்டங்களில் பல வெள்ளையர்கள் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்பதையும், மண்டியிட்டு மன்னிப்புக் கோருவதையும் பார்க்கிறோம். அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வெள்ளையர்கள் என்று பேராசிரியர் அருணன் ஒரு இணையத்தள உரையாடலில் தெரிவித்தார்.
ஆயினும் அந்தப் போராட்டங்களில் பங்கேற்க முன்வராத வெள்ளையர்கள்தான் மிகுதி. கைகளை உயர்த்தி வராத கறுப்பர்களும் இருக்கக்கூடும். இங்கே தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களில் தலித் அல்லாதவர்கள் கரம் கோர்க்கிறார்கள் – ஆனால் தலித் அல்லாத எல்லோருமல்ல. தலித்துகளிலும் எல்லோருமல்ல. பாலின சமத்துவத்திற்கான போராட்டங்களில் பெண்களோடு ஆண்களும் தெருவுக்கு வருகிறார்கள். ஆனால் எல்லா ஆண்களும் அல்ல; ஆம், எல்லாப் பெண்களும் வருவதில்லைதான்.
எது எப்படிப் போனால் எனக்கென்ன என்று கண்ணை மூடிக்கொள்கிறபோது, வஞ்சிப்பவர்களைக் காணத் தவறுவதோடு, வஞ்சிக்கப்படுகிறவர்களையும் பார்க்க மறுக்கிறோம். அதன் மூலம் அந்த வஞ்சகங்கள் தொடர உடந்தையாகிவிடுகிறோம். ஒவ்வொருவருக்கும் இந்தக் குற்றவுணர்ச்சி ஏற்படுமானால் அவர்களுடைய கண்கள் மூடிக்கொள்ள மறுத்துவிடும். கண் திறந்து பார்த்தால் அல்லவா, செவி திறந்து கேட்டால் அல்லவா, அநீதிகளுக்கு எதிராக வாய் திறந்து பேச முடியும்? மௌனத்தைக் கலைக்க முடியும்?
உங்கள் மௌனத்தால் உங்களுக்கு மட்டும் தீங்கு ஏற்படுவது ஒரு சுயவதை. ஆனால் சுற்றியிருப்போருக்கும் தீங்கு விளைகிறதென்றால் அது ஓசையின்றி நீங்கள் செய்கிற குற்றம்.
காந்தி வன்முறையற்ற அறவழிப் போராட்டத்தைத்தான் வலியுறுத்தினாரேயன்றி, மௌனமாக இருப்பதை அல்ல. போராட்டமும் உரக்கக் குரலெழுப்புவதுமே கூட அறத்தை நிலைநாட்டுவதற்கான வழிதான். சொந்தப் பிரச்சினைகளுக்காகச் சொந்த உறவுகளோடு பேச மறுப்பது வேறு, பொதுப் பிரச்சினைகளில் பொது வெளியில் குரலெழுப்பத் தவறுவது வேறு. ஏதாவது முக்கியமான பிரச்சினை முன்னுக்கு வருகிறபோது, “அரசாங்கம் என்னதான் செய்கிறது,” ”இந்த அரசியல் கட்சிகள் எங்கே போய்விட்டன,” “சங்கங்கள் என்ன கிழித்துவிட்டன” என்றெல்லாம் முணகல்கள் ஒலிக்கின்றன. முனகல்கள் முழக்கங்களாக ஓங்கி ஒலிக்கிறபோதுதான், ஆகப் பெரும்பாலோரிடமிருந்து கண்டனங்கள் எழுகிறபோதுதான் அரசாங்கம் இனி சும்மா இருக்க முடியதென அசையும், அரசியல் கட்சிகள் நம்பகமான ஆதரவுத் தளம் கிடைத்ததென ஊக்கம் பெறும், சங்கங்கள் நம்பிக்கையோடு புறப்படும்.
பொது மௌனம் கலைந்து பரவுகிற ஒலியின் அடர்த்தியில் வெற்றுக் கூச்சல்கள் அடங்கும், பொது அமைதி நிலைபெறும். இன்றைய நம் அமைதி நேற்று மௌனம் கலைத்தவர்களால் கிடைத்ததே. நாளைய தலைமுறைகளின் அமைதிக்கு இன்று நாம் மௌனம் கலைக்க வேண்டும்,
�,