kசுடுகாடுகளைச் சுத்தம் செய்த ஊர் மக்கள்!

Published On:

| By admin

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் இரண்டு சுடுகாடுகளை அந்த ஊர் மக்களே சுத்தம் செய்துள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது.
அம்மாபேட்டை காவிரிக்கரையில் சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களின் உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ இங்கு கொண்டு செல்வார்கள். இதேபோல் ஊமாரெட்டியூர் பிரிவு பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது. ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், மூனாஞ்சாவடி, இந்திராநகர், கோலக்காரனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் இந்தச் சுடுகாட்டை பயன்படுத்தி வந்தார்கள்.
இரண்டு சுடுகாடுகளும் முட்புதர்களால் சூழப்பட்டு உள்ளே நுழைய முடியாத நிலையில் இருந்தது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும்போது பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் பொதுமக்களே இரண்டு காடுகளையும் சுத்தம் செய்ய முடிவெடுத்தார்கள். இதற்காக பணம் வசூல் செய்தனர். அதைக்கொண்டு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து கூலி ஆட்களை நியமித்து சுத்தம் செய்தார்கள். தற்போது சுடுகாடு சுத்தமாக உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அந்தப் பகுதி பொதுமக்கள், “புதர் மண்டிய சுடுகாடுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் சுடுகாடு புதர்போல் ஆகிவிட்டது. இறந்தவர்களின் உடல்களை உள்ளே கொண்டு செல்வதே பெரிய சிரமமாக இருந்தது. அதனால் நாங்களே பணம் திரட்டி சுத்தம் செய்து விட்டோம். மேலும் சாக்கடை கழிவுநீர் அடைத்துக்கொள்ளாத வகையில் குழாயும் அமைத்துள்ளோம்” என்றார்கள்.
இரண்டு சுடுகாடுகளை அந்த ஊர் மக்களே இப்படி சுத்தம் செய்துள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share